
நடிகர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி மைனர் சிறார்கள் மும்பைக்கு வருவது வழக்கம். ஆனால் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு மைனர் சிறுமிகள் பள்ளி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோருக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடி மும்பைக்கு சென்றுள்ளனர்.
கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் இருக்கும் கஸ்தூர்பா நகரில் வசிப்பவர்கள் அந்த இரு சிறுமிகள். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் இரண்டு பேரும் பள்ளியில் நடந்த தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தனர். இதனால் அவர்கள் தங்களது பெற்றோர் தங்களை கண்டிப்பார்கள் அல்லது அடிப்பார்கள் என்று அச்சம் அடைந்தனர். எனவே இருவரும் வீட்டிற்கு செல்லாமல் நேராக பஸ்ஸில் ஏறி வெளியூருக்கு சென்றனர். பெற்றோர் போன் பண்ணி பேசியபோது டிராயிங் வகுப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இரண்டு பேரும் பஸ்ஸில் ஏறி ஹூப்ளி சென்றனர். அங்கிருந்து அவர்கள் மும்பைக்கு சென்றுவிட்டனர். இருவரும் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததை கண்டு அவர்களை பெற்றோர் தேட ஆரம்பித்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமிகள் காணாமல் போனது குறித்து அவர்களின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். பேருந்து நிலையத்தில் விசாரித்த போது இரண்டு மைனர் சிறுமிகளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீர்டி செல்வதற்கு எந்த பஸ்சில் ஏறி செல்ல வேண்டும் என்று கேட்ட விவரம் தெரிய வந்தது.
இது குறித்து உள்ளூர் மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் பஸ்சில் ஏறிச்சென்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் விசாரித்தபோது அவர்கள் மும்பைக்கு சென்று இருப்பது தெரிய வர, உடனே தனிப்படை போலீஸார் மும்பை சென்று இரண்டு மைனர் சிறுமிகளையும் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது பள்ளியில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர் அடிப்பார்கள் என்று பயந்து வீட்டை விட்டு ஓடியதாக தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் போலீஸார் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.