
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரசித்தி பெற்ற ஆதி வழிவிடு விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 37 வருடங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு பிரமாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு ஊர்வலம் எடுத்து வந்து கரைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில், ஆதி வழிவிடு விநாயகர் திருக்கோயிலில், 38-வது விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரமாண்ட விநாயகர் சிலைகளான அருள் பொருள் அருளும் கணபதி, மங்கள கணபதி, விஜய கணபதி, மிர்த்தன கணபதி, ஆனந்த கணபதி, சயன கணபதி என 6 விதமான பிரமாண்டமான சிலைகள் செய்யப்பட்டது.
பின் ஐந்து வாகனத்தில் ஆதி வழிவிடு விநாயகர் கோயிலில் இருந்து தென்காசி தேசிய நெடுஞ்சாலை வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் வழிபாடு செய்யவதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஊர்வலத்தின் போது ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் விநாயகரை வணங்கினர். விழா துவங்கிய நாள் முதல் விநாயகர் சதுர்த்தி வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு 3 வேலை அன்னதானம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.