
பெண்ணின் கருமுட்டையில்கூட நேனோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது எப்படி ரத்தத்தில் கலக்கிறது என்பதற்கான காரணம், இதுவரை சரிவர தெரியவில்லை.
என்றாலும் குடலில் சேரும் நேனோ பிளாஸ்டிக், குடலில் உள்ள இறுக்கமான புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் கண்ணுக்குப்புலப்படாத இடைவெளிகளின் வழியே ரத்தத்தில் கலந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இது நம் உடலில் நேனோ பிளாஸ்டிக்கின் நேரடி தாக்குதலாக இருக்கலாம். இதைத் தவிர, நேனோ பிளாஸ்டிக் நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம், குடலில் உள்ள நுண்ணிய விரல் போன்ற அமைப்புகளில் பிளவு ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது.
இதனால் குடலில் இன்ஃபளமேட்டரி பவல் டிசீஸ் (Inflammatory bowel disease – IBD) போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றைத் தவிர, ரத்தக்குழாயில் படிகிற படிவுகளிலும் (Plaques) நேனோ பிளாஸ்டிக் ஊடுருவி இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இப்படி மைக்ரோ பிளாஸ்டிக், இது நமக்கு செய்யும் கெடுதல்களை உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சிகள் எடுத்துச்சொல்லி பதறிக் கொண்டிருக்கின்றன.
மனிதர்களின் ரத்தம், தாய்ப்பால் வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
விளைவு, ஒருபக்கம் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்க சொல்லி உலகின் பல நாடுகளும் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பல மாநிலங்கள் தடை விதித்துக் கொண்டிருக்கின்றன. என்றாலும் நம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நூறு சதவிகிதம் முடியவில்லை என்பதுதான் நிஜம்.
சிறு கருவிகளில் தொடங்கி மருத்துவ உபகரணங்கள் வரை பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பல துறைகளிலும் பிளாஸ்டிக்கின் தன்மை, வேறு மாற்றுப்பொருள்களைவிட பயன்பாட்டுக்கு உகந்ததாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இந்த நேரத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் நமக்கு செய்யக்கூடிய அல்லது செய்துகொண்டிருக்கும் ஆரோக்கிய ஆபத்துகளை பற்றி தெரியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு என்கிற பதற்றமும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் என்றால் என்ன; அது நமக்கு என்னென்ன தீங்குகள் செய்கிறது; அதைத் தவிர்ப்பதற்கு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம்.
நாம் தினசரி பயன்படுத்துகிற பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு துளித்துளியாக பிளாஸ்டிக் நம் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சிறு துளி பிளாஸ்டிக்கைதான் மைக்ரோ பிளாஸ்டிக் என்று சொல்கிறோம்.
மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவு எவ்வளவு என்று பார்த்தால், குறைந்தபட்சம் ஒரு மைக்ரோ மீட்டர் முதல் அதிகபட்சம் 5 மில்லி மீட்டர் வரை இருக்கும். இதில் ஒரு மைக்ரோ மீட்டர் என்பது கண்ணுக்கே தெரியாதது. இதைத்தான் நானோ பிளாஸ்டிக் என்றும் குறிப்பிடுகிறோம்.

நம் எல்லோருக்குமே பிளாஸ்டிக் மட்கிப்போகாது என்பது தெரியும். ஆனால், சூரிய ஒளி, நீர் போன்ற காரணிகளால் அது புலப்படுகிற அளவுக்கு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு மெல்லிய இழைகளாக சிதையும்.
பிளாஸ்டிக் பொருள்கள் மட்டுமல்லாமல், பாலியஸ்டர் போன்ற செயற்கை நூல் இழைகள்கூட இப்படித்தான் மெல்லிய இழைகளாக சிதையும்.
ஒரு மைக்ரோ மீட்டர் அளவு, நம் கண்களுக்கு புலப்படாத பிளாஸ்டிக் துகள்கள் நம் சுற்றுப்புறத்தில் காற்றில் மிதந்து கொண்டிருக்கும்.
நம் உடலில் இருக்கிற செல்களோ 10 மைக்ரோ மீட்டர் முதல் 100 மைக்ரோ மீட்டர் வரை இருக்கும். பொதுவாக நம் உடலின் செல்களுக்குள் வேறு எதுவும் சென்றுவிட முடியாது என்றாலும், எப்போதுமே அப்படி இருக்க முடியாது என்பதும் நிஜம்.
மைக்ரோ பிளாஸ்டிக் நம் ரத்தத்துக்குள் கலப்பது மிக மிக கடினம் என்று நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அது நம் வயிற்றுக்குள் சென்ற பிறகு நம் உடலில் இருக்கிற கல்லீரல் நமக்கு ஒவ்வாத விஷயங்களை அது தன்னகத்தே தக்க வைத்துக் கொள்ளும்.
கல்லீரலைத் தாண்டி நமக்கு எந்தக் கெடுதலும் வந்து விடாது என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை. ஆனால், சமீப கால ஆராய்ச்சிகள் ‘மனித செல்களைவிட இந்த மைக்ரோ பிளாஸ்டிக், அளவில் மிக மிகச் சிறியதாக இருப்பதால், எப்படியோ கல்லீரல் பாதுகாப்பையும் தாண்டி நம்முடைய செல்களுக்குள் நுழைந்து விடுகின்றன’ என்கின்றன.

கல்லீரலைத் தாண்டி மைக்ரோ பிளாஸ்டிக் எப்படி நம்முடைய ரத்தத்தில் கலக்கின்றன என்பதும், கல்லீரலில் தன்னகத்தே தடுத்து நிறுத்துகிற இந்த மைக்ரோ பிளாஸ்டிக் கல்லீரலில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படுத்தலாம் என்பதும் இன்னமும் ஆராய்ச்சியில்தான் இருக்கின்றன.
இதை தடுக்க வேண்டும் என்றால் ‘ரீ யூஸ்’ எனப்படுகிற மறுசுழற்சி முறையில் முழு கவனம் செலுத்த வேண்டும். எவற்றில் எல்லாம் பிளாஸ்டிக் தவிர்க்க முடியுமோ அதில் எல்லாம் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். ஒரு பேப்பர் கப்பில் தேநீர் அருந்துவதைவிட கழுவி பயன்படுத்தக்கூடிய டம்ளர்களில் அருந்தலாம்.
உணவுக்கு செராமிக் அல்லது ஸ்டீல் பாத்திரங்களை உபயோகிக்கலாம். மெட்டல் கேன்களை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால் அவற்றை பயன்படுத்தலாம். ஃபவுண்ட்டன் பேனா வழக்கத்தை திரும்பவும் கொண்டு வர முயற்சி செய்யலாம்.
ஒவ்வொரு முறையும் பிளாஸ்டிக் பேனாக்களை வாங்கி, அவை தீர்ந்த பிறகு குப்பைகளாக்க வேண்டமே. பருத்தி உடைகளை முடிந்தவரை பயன்படுத்துங்கள்.
ஷாப்பிங் செய்ய துணிப்பைகளையும், சணல் பைகளையும் பயன்படுத்தலாம். மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதப்பைகள் நல்ல மாற்று.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், குறைப்பதற்கு முயற்சி செய்வது மட்டுமே மைக்ரோ பிளாஸ்டிக் ஆபத்திலிருந்து, பூமியிலிருக்கிற உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி” என்கிறார் டாக்டர் ராஜேஷ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…