• August 18, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டையொட்டி சேலம் போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், “தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என தீர்மானிக்கிற மாநாடாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த 4 நாள் மாநாட்டில் 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனை செயல்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தும். அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில், போராட்டம் அறிவிக்கிறபோது, இதேபோன்று நீங்கள் திரளாக பங்கேற்க வேண்டும். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், தோழமை கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். 1950 ஆம் ஆண்டு சேலம் சிறையில் சுட்டுக்கொல்லப்பட்ட 22 தியாகிகள் நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டோம். ஆனால், முதல்வர் ஸ்டாலினோ 22 தியாகிகள் நினைவாக மணிமண்டபம் விரைவில் கட்டப்படும் என அறிவித்தார். அவருக்கு உங்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முத்தரசன்

எதிர்காலத்தில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்டம் போன்றவை இருக்குமோ என்ற தற்போது கேள்வி எழுந்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனநாயக அரசு அல்ல. பாசிச அரசு. பாசிச அரசை வீழ்த்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம். சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்ற மாநாடு முதல் இன்று வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி 100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக வீறுநடை போடுகிறது. எண்ணற்ற தியாகங்களை செய்து, விடுதலை பெற்றுத் தந்தோம். நாட்டின் வரலாறை எழுதுவதாக இருந்தால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை புறக்கணித்துவிட்டு எழுத முடியாது. நெருப்பாற்றில் நீந்தி வந்த மகத்தான இயக்கம். நில பிரபுவத்துவ இயக்கம், ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்த கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சி. சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடி வெற்றிக்கண்ட மகத்தான இயக்கத்தை பார்த்து கம்யூனிஸ்ட் கட்சி அழிந்து விட்டது, தேய்ந்துவிட்டது, அடையாளம் அற்றுபோய்விட்டது என கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.

சிபிஐ பொதுக்கூட்டம்

இந்தப் படையை பார்த்து, செங்கொடியின் தவப்புதல்வர்களை பார்த்து முகவரி இல்லை என சொல்வதற்கு எடப்பாடிக்கு எந்த அருகதையும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி உண்டு. அது எடப்பாடிக்கு இல்லை. காணாமல் போன, தேய்ந்து போன கட்சிக்கு நீங்கள் ஏன் அழைப்பு விடுத்தீர்கள். எதற்காக ரத்தின கம்பளம் விரிக்கிறோம் என கூறினீர்கள். ஆனால், நாங்கள் அதனை ரத்த கறை படிந்த கம்பளமாக தான் பார்த்தோம். பின்னர் திருவாரூர் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் பணம் வாங்கிவிட்டார்கள். ஸ்டாலினுக்கு அடிமையாகிவிட்டனர் என பேசுகிறார். பாஜகவின் காலாடியில் விழுந்து கிடக்கிற ஆட்கள் நாங்கள் அல்ல. ஊர்ந்து சென்று பதவியை பெற்ற அடிமையாகிய நீங்கள், எங்களை பார்த்து எப்படி கேட்கிறீர்கள். பகிரங்கமாகவே வங்கிக் கணக்கு மூலம் தான் திமுக தேர்தலுக்கு எங்களுக்கு பணம் அனுப்பியுள்ளனர். இதற்கான கணக்கை முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து உள்ளோம். ஆனால், ஒருபோதும் பாஜகவுடன் சேர மாட்டேன் என உறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது வெட்கமின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். மதச்சார்பின்மைக்கு, அரசியல் அமைப்புக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் எப்படி கூட்டணி அமைத்தீர்கள். தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும். நேர்மையாக இருந்தால் அரசியல் பேச வேண்டும். அதைவிடுத்து அவதூறு பொழியக் கூடாது. இந்திய கம்யூனிஸ்ட் மீது அவதூறு பரப்பினால் இருக்கும் இடம் தெரியாது போய்விடுவீர்கள். வரும் 2026 தேர்தலில், உங்களை இருக்கும் இடம் தெரியாமல் தோற்கடிப்போம். நீங்களும் சரி, நீங்கள் ஆதரிக்கும் பாஜகவும் இங்கு ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்று பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *