• August 18, 2025
  • NewsEditor
  • 0

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வசித்து வருபவர் அப்துல்கலாம் ஆசாத். இவருக்கு சாரா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். பி.ஏ பட்டதாரியான மகள் ஷர்மி (வயது 26) என்பவரை களியல் அருகே உள்ள நெட்டா பகுதியை சேர்ந்த காலித் என்பவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொடுத்துள்ளார். கர்ப்பமான ஷர்மி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஷர்மிக்கு கடந்த 7 மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஹைரா என பெயரிட்டுள்ளனர். ஷர்மியின் கணவர் காலித் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதால் ஷர்மி பெற்றோருடன் வசித்து வந்தார். பிறந்து 7- மாதமான குழந்தை ஹைராவை சரியாக கவனிக்காமல் பெரும்பாலான நேரங்களில் மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தார் ஷர்மி. இதை அவரது தாய் சாரா கண்டித்துவந்துள்ளார். இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நீரில் மூழ்கி தற்கொலை

நேற்று இரவு 8 மணியளவில் ஷர்மியின் குழந்தை அழுதுகொண்டே இருந்திருக்கிறது. குழந்தை அழுவதை கவனிக்காமல் மொபைல் போனில் வீடியோ பார்த்தபடி இருந்திருக்கிறார் ஷர்மி. குழந்தையை கவனிப்பதைவிட செல்போன் பார்ப்பது முக்கியமாகிவிட்டதா எனக்கூறியபடி ஷர்மியை அவரது தாய் கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதத்துக்கு இடையே ஷர்மியின் தாய் சாரா, ‘இனி உன் குழந்தையை நீ தான் கவனிக்க வேண்டும். நான் கவனிக்கமாட்டேன்’ என கோபமாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஷர்மி நான் குளத்தில் விழுந்து சாகப் போகிறேன் எனக் கூறியபடி குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றுள்ளார். தன்னை மிரட்டுவதற்காக மகள் சும்மா கூறுவதாக நினைத்த சாரா, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

செல்போன் பார்த்ததை தாய் க கண்டித்ததால் குழந்தையுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட ஷர்மி

வீட்டை விட்டு போன மகள் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் பதற்றம் அடைந்த தாய் சாரா, உறவினர்களுடன் மகளைத் தேடிச் சென்றார். வீட்டின் அருகில் உள்ள ஞாறகுழிவிளை குளத்தில் மூழ்கிய நிலையில் குழந்தையுடன் ஷர்மி கிடப்பதை கண்டு தாயும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஷர்மியையும், 7 மாத குழந்தையையும் குளத்தில் இருந்து மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஷர்மி மற்றும் அவரது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் இருவரும் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஷர்மி மற்றும் அவரது குழந்தையின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். செல்போனில் மூழ்கியதை தாய் கண்டித்ததால் பட்டதாரி இளம்பெண் தனது 7-மாத கைக் குழந்தையுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *