
வனங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம். ஆனால், வளர்ச்சி என்கிற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனவிலங்குகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன.

நாட்டில் மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது வயநாடு மாவட்டம். அதேவேளையில், மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளை கடக்கும் யானை குடும்பங்களில் இருந்து குட்டிகள் தனியாக வழிதவறும் சோகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட புல்பள்ளி பகுதியில் குடும்பத்தை தவறவிட்டு வழிதவறிய பச்சிளம் யானை குட்டி ஒன்று, அருகில் இருந்த அரசு மழலையர் பள்ளிக்குள் இன்று மதியம் நுழைந்திருக்கிறது. அழையா விருந்தாளியாக திடீரென பள்ளிக்குள் நுழைந்து அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த யானைக் குட்டியைக் கண்ட குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியில் குதூகலித்துள்ளனர்.

ஆசிரியர்கள் மூலம் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள் குட்டியை பத்திரமாக மீட்டுள்ளனர். மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்துள்ள வயநாடு வனத்துறையினர், ” இந்த பள்ளியைச் சுற்றிலும் வயல்வெளிகள் அதிகம் உள்ளன. உணவு மற்றும் தண்ணீரைத் தேடி கடந்த சில நாள்களாக யானைகள் கூட்டமாக நடமாடி வருகின்றன. கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை குட்டி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது.

தலைமை ஆசிரியர் அறை முன்பு தடுமாறிக் கொண்டிருந்த குட்டியை மீட்டுள்ளோம். கூட்டத்தைக் கண்டறிந்து தாயுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் ” என தெரிவித்துள்ளனர்.