
துணை ஜனாதிபதி தேர்தல்
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூடிய பா.ஜ.க தலைமை கூட்டத்தில், துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணனை பா.ஜ.க தலைமை தேர்ந்தெடுப்பதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் இருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சி.பி.ராதாகிருஷ்ணன் செய்த பணிகள்
மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட், தெலங்கானா, பாண்டிச்சேரியில் ஆளுநராக இருந்துள்ளார்.
ஜார்க்கண்டில் ஆளுநராக இருந்த போது குறுகிய காலத்தில் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டத்திற்கும் சென்று மக்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசியுள்ளார். அதேசமயம் எதிர்க்கட்சிகள் சொல்வதையும் காது கொடுத்து கேட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் செய்த பணிகள்
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதிதான் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக பதவியேற்றார். அதன் பிறகு ராஜ்பவனில் அமைதியாக இருக்காமல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும் சந்தித்து பேசினார்.
அதோடு சமுதாயத்தின் அடிமட்டத்தொண்டர்களைக்கூட சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அவரை யார் நேரில் சென்று எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு சென்று கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த மாதம் நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அதோடு அனைவரையும் அரவணைத்து செல்வதில் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருந்தார். தனது பதவிக்காலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிகப்படியான எதிர்க்கட்சி குழுக்களை சந்தித்து பேசினார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, நிதி மோசடி, சட்டமன்றத்தில் எழுப்பப்படும் பிரச்னை என எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் சொல்லும் புகார்களை சி.பி.ராதாகிருஷ்ணன் மிகவும் பொறுமையுடன் காது கொடுத்து கேட்டார்.
அதோடு அவர்கள் கொடுக்கும் புகார்கள் மற்றும் தனக்கு வரக்கூடிய புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
சட்டமேலவைக்கு நியமன உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான மாநில அரசின் கோரிக்கை நீண்ட நாள்களாக ஆளுநரிடம் கிடப்பில் இருந்தது. அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார்.
கறை படியாத கரங்கள்
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோரிடமும் இணக்கமான உறவை பேணினார்.
கறை படியாத கை, அனைத்து அரசியல் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லுதல் போன்ற காரணங்கள்தான் சி.பி.ராதாகிருஷ்ணனை இந்த உயரத்திற்கு கொண்டு சென்று இருப்பதாக பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவரை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலைப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு என்றும் பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.
சி.பி.ராதாகிருணனை கொண்டு திராவிட கட்சிகளுடன் இருக்கும் உறவை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர்.
ஆளுநர் ஒருவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு சங்கர் தயாள் சர்மா 1987-ம் ஆண்டு ஆளுநராக இருந்தபோது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதே போன்று 2002-ம் ஆண்டு ஆளுநராக இருந்த பி.சி.அலெக்சாண்டர் பெயர் ஜனாதிபதி பதவிக்கு இறுதி செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு அந்த இடத்திற்கு அப்துல் கலாம் கொண்டு வரப்பட்டார்.
தமிழகத்தில் பாஜக வலுவாகுமா?
இது குறித்து அரசியல் நிபுணர்கள் தரப்பில் கூறுகையில், ”தற்போது சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி ஆக்குவதன் மூலம், அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அது தங்களுக்கு சாதகமாக அமையும் என்று பா.ஜ.க நம்புகிறது.

தமிழகத்தில் வலுவாக வேறூன்ற பா.ஜ.க எவ்வளவோ முயன்று பார்க்கிறது. ஆனால் பா.ஜ.கவின் எந்த முயற்சியும் பலனளிக்காமல் இருக்கிறது.
ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை மாநில பா.ஜ.க தலைவராக்கினார்கள். ஆனால், அதிமுகவோடு கூட்டணி வைக்கவேண்டும் என்ற காரணத்திற்காக அவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் சொல்படி கேட்டு நடக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க உள்ளது” என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.