• August 18, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் அமைத்துள்ள `தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்’ மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியின் பெரும் முயற்சியில் 30.9.2009 ஆம் ஆண்டு அன்றைய மத்திய மனிதவள அமைச்சரான கபில் சிபில் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு தமிழ், சட்டம், சமூகப் பணி, காட்சி வழி தொடர்பியல் உள்ளிட்ட 27-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.

இக்கல்லூரியில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளா, தெலுங்கானா போன்ற பிற மாநில மாணவர்களுடன் சேர்த்து 2700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதில் 65 சதவீதத்தினர் கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். ஆனால் கல்லூரியின் தனியார் விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும் புழுக்களும், பூச்சிகளும், நகங்களும் கிடப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத கல்லூரியில் பயிலும் மாணவி, மாணவர்களிடையே விசாரித்தோம். “ஹாஸ்டல் மெஸ் ஃபீஸ் மட்டும் மாதம் ரூ.4320 என்னைப் போன்ற மாணவர்கள் கட்டி வருகிறோம். இதில் குவான்டிட்டி பாக்கணும்னா அதிகமாகவும் குவாலிட்டி வைஸ் குறைவாகவும் இருக்கும்.

இங்கு கொடுக்கப்படுற பாலில் பவுடர் மிக்ஸ் பண்ணியும், சாம்பார் தண்ணியாகவும், இட்லி மாவு புளித்தும், பொங்கல் கட்டியாகவும், கொடுப்பாங்க எங்களது ஃபுட்டில் டெய்லியும் இது போன்று பூச்சிகளும் புழுக்களும் தட்டான்களும் நெறஞ்சிருக்கும்.

ஒரு நாள் இதை தட்டோட ஹாஸ்டல் வார்டன் சார்கிட்ட காட்டினேன். `நீ போய் வேற ஃபுட் வாங்கி போட்டுக்க’ என்று அலட்சியமாக பதில் கூறினார்.

உணவில் ஏதும் குறைபாடு இருந்தால் ஃபீட்பேக் எழுத சொல்லி யுனிவர்சிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் நோட்டிபிகேஷன் அனுப்பினாலும் மேற்கொண்டு எந்த ரெஸ்பான்ஸும் இருக்காது.

இந்த பிரச்னை யுனிவர்சிட்டிக்கு தெரியும் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கவில்லை.

ஹாஸ்டலும் சரியாக மெயின்டைன் பண்ணாம மேலிருந்து இடிஞ்சு கொட்டுது” என்று அந்த மாணவர் கூறினார்.

அருகில் உள்ள கேரளத்தை சேர்ந்த மாணவி ஒருவர், “அண்ணா நேத்து நைட் சாப்பாடு குவான்டிட்டி ரொம்ப கம்மி அதனால நாங்க வார்டன்டையும் சமைக்கிற அண்ணா, அக்கா கிட்டயும் கூறினோம். ஆனா சரியான ரெஸ்பான்ஸ் பண்ணல.

Thiruvarur Central University
Thiruvarur Central University

என்னோட வந்த ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும், இரவு உணவுக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணினோம்.

குட் காண்ட்ராக்ட் எடுத்த அந்த மேனேஜர் வந்து தான் சாப்பாடு ரெடி பண்ணினார்கள் அதுவும் அவசர அவசரத்துல மெனுக்கு உள்ள சாப்பாடு இல்லை.

இந்த மாதிரி குவாண்டிட்டி, குவாலிட்டி குறைவா சாப்பிடுறதால எங்களுக்கு ஸ்டொமக் பெயின், பீரியட்ஸ், ஃபுட் பாய்சன் இதுபோல பிரச்னை நிறைய வருது.

எஸ்சி, எஸ்டி ஸ்டூடண்டுக்கு ஹாஸ்டல் ஃப்ரீ என்கிற ரூல் இருக்கிறப்போ காலேஜ் அண்ட் மெஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டினால் தான் ஹாஸ்டல் அலாட் பண்ணுவோம்னு எங்கள போர்ஸ் பண்றாங்க” என்று தனது வேதனையை தெரிவித்தார்.

இது குறித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீ பிரபஞ்ச் அவர்களிடம் விசாரித்தோம் “மாணவர்களின் தற்போதைய உணவு பிரச்னை சம்பந்தமாக எனது கவனத்திற்கு வரவில்லை. உணவு தொடர்பான பிரச்னை இருக்கும் இடத்தில் கூடிய விரைவில் சரி செய்யப்படும்” என்று அவர் கூறினார்

இந்த பல்கலைக் கழகத்தில், அடுத்த மாதம் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *