• August 18, 2025
  • NewsEditor
  • 0

பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது.

இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றன.

மேலும், இது தொடர்பான வழக்கு ஒன்றில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்தபோதும், வெளியீட்டாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம்

இத்தகைய சூழலில் நேற்று (ஆகஸ்ட் 17) செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “பீகாரில் ஏழு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் நிற்கும்போது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை அல்லது வாக்காளர்களின் நம்பகத்தன்மை குறித்து எந்த கேள்விக்குறியும் எழுப்ப முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு” என்று தேர்தல் ஆணையத்தின்மீது 7 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டாலின்,

1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

3. Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

4. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளுமா?

5. 01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

7. “நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் – வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?” எனக் கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *