
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ அக்டோபர் முதல் தேதியன்று திரைக்கு வருவதால், அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் பரபரக்கிறது. இன்னொரு பக்கம் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் தனுஷ்.
‘இதயம் முரளி’ படத்தை இயக்கி தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன், ‘இட்லி கடை’ படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மெனென், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் ஆக ‘என்ன சுகம்’ லிரிக் வீடியோ வெளியானது. தனுஷுடன் ஸ்வேதா மோகன் அந்த மெலடியைப் பாடியிருந்தார். இந்நிலையில் இரண்டாவது சிங்கிளான ‘என்சாமி தந்தானே’ இம்மாதம் வெளியாகிறது. தனுஷ் பாடியிருக்கும் இந்தப் பாடல், மண்மணம் மிக்க எனர்ஜி துள்ளும் கிராமியப் பாடல். இதற்கிடையே படத்தின் இடைவெளியீட்டையும் திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்தியில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ நடித்துமுடித்த தனுஷ், தமிழில் ‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ‘டி-54’ல் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு எனப் பலர் நடிக்கிறார்கள். ‘வீர தீர சூரன்’ தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஷூட்டிற்கு இடையே ‘இட்லி கடை’யின் பேட்ச் ஒர்க் வேலைகளையும் சில நாட்கள் நடத்தி முடித்திருக்கிறார். தனுஷ். விக்னேஷ் ராஜா படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு அடுத்து ராமநாதபுரம், தேனி பகுதிகளில் நடக்கவுள்ளது. அங்கே தொடர்ந்து சில வாரங்கள் நடக்கிறது. இதற்கென இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.

தனுஷ் கடந்த ஜூலை 27ம் தேதி மற்றும் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி ஆகிய இரு தினங்களில் 500 ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நேற்று (ஞாயிறு) ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவில்லை. இனி அடுத்த சந்திப்பு ராமநாதபுரம் ஷெட்யூலை முடித்தபின்னர் இருக்கும் என்கிறார்கள். அதைப் போல விக்னேஷ் ராஜாவின் படத்தை முடித்துவிட்டு தனுஷ் அடுத்து ‘அமரன்’ ராஜ்குமார் பெரியசாமியின் படத்திற்கு வருவார் என்கிறார்கள்.