• August 18, 2025
  • NewsEditor
  • 0

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, குடியரசு துணைத் தலைவர் பதவியை திடீரென ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.

கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகக் குடியரசு துணைத் தலைவர் இல்லாமலேயே மாநிலங்களவை இயங்கிவரும் நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணை பா.ஜ.க நேற்று அறிவித்தது.

வாஜ்பாயுடன் சி.பி. ராதாகிருஷ்ணன்

அடுத்த 9 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் அதை மனதில் வைத்துதான் சி.பி. ராதாகிருஷ்ணை பா.ஜ.க தேர்வுசெய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போட்டிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு” என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி, “இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராகத் தமிழகத்தைச் சேர்ந்தவரும், மராட்டிய மாநில ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.

திருப்பூர் மாவட்டத்தில் பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இரு முறை கோவை மக்களவை உறுப்பினராகவும், மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகவும், இந்திய தென்னை நார் வாரிய தலைவராகவும் பணியாற்றியவர்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பா.ஜ.க மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி உள்ளிட்டோரின் நம்பிக்கையைப் பெற்றவர். பொதுவாழ்க்கையில் எந்தக் காலத்திலும், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.

குடியரசுத் துணைத் தலைவர் என்ற முறையில், மாநிலங்களவையை வழிநடத்திச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு.

அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும் திறன் அவருக்கு உண்டு.

இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சி. பி. இராதாகிருஷ்ணன் செயல்படுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *