• August 18, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

தற்கால சூழலில் எவ்வாறு இணையவசதி கொண்ட ஆண்ட்ராய்டு கைபேசி கரங்களைத் தழுவிக் கொண்டு கண்களுக்கு விருந்தாகிறதோ! அதுபோல அன்றைய காலங்களில் வார இதழ்களும், மாத இதழ்களும் இளையோர் முதல் முதியோர் வரை அனைவர் கரங்களிலும் தவழ்ந்து அவர்தம் விழிகளில் விழுந்து உள்ளம் நனைக்கும்,

இதில் பலருக்கும் பல விதங்களில் விருப்பமுண்டு நடுத்தர வயதுடையோருக்கு தினசரிகளை படிப்பதில் ஆர்வமென்றால், வாலிப வயதினருக்கு வார, மாத இதழ்கள் முதல் நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், தொடர்கதைகள் என பலவித புத்தக வடிவங்களில் ஆர்வமும், சிறுவர்களுக்கு காமிக்ஸ் புத்தகங்களிலும் ஆர்வமும், விருப்பமும் மிகுந்திருக்கும். 

இப்படியாக பண்டமாற்று முறைமையைப் போன்று  புத்தகமாற்று முறைமைகளும் அப்போது நடைபெருவதுண்டு, நட்பு வட்டத்தில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு அவரிடமுள்ள புத்தகத்தைத தெரிந்துகொண்டு வேறொரு புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு அதனை தமது நண்பரிடம் கொடுத்து அவரிடமுள்ள புத்தகத்தை தாம் வாங்கிப் படிப்பதுண்டு, இப்படியாக வாசித்தலின் பேரார்வம் இதயம் தொட்டு இதயம் கடந்தது.. 

ஏறத்தாழ எனது பள்ளிப் பருவம் முதல் நான் விகடனின் வாசகன், எனது புத்தக அலமாரிக்குள் பள்ளி சம்பந்தமில்லாத ஒரு புத்தகம்  உண்டென்றால் அது விகடனாகத்தான் இருக்கும், பள்ளிப் புத்தகங்களை படிக்கும் நேரம்போக நான் வாசிக்கும் ஒரு புத்தகம் உண்டென்றால் அது விகடனாகத்தான் இருக்கும்.

எனக்கு விகடனை அறிமுகப் படுத்தியது எனது பாசத்திற்குரிய தந்தையார்தான் எனது தந்தை வெளியூர் சென்றுவிட்டு வரும்போதெல்லாம் அவரது கரங்களில் குடிகொண்டு சுருண்டிருக்கும் விகடனை வாசல் கதவிலேயே கண்கள் பிரகாசிக்க பிடுங்கிக் கொண்டு சென்றுவிடுவேன், ஏனெனில் எனது தந்தை புத்தகத்தை வாங்கியபின் பேருந்து வரும் நேரம்வரையிலும், பிறகு பேருந்து பயணத்திலும் அந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடித்திருப்பார், அந்தளவு எனது தந்தையும் விகடனின் வாசகர்தான்  அதிலும் எனது தந்தை ஜூனியர் விகடனின் பரம விசிறி அத்தோடு எனது ஆனந்த விகடனின் ஆர்வத்தைப் பார்த்து எனது ஏமாற்றத்தைப் போக்கிட எனது நெஞ்சுகிக்கினிய நண்பனான விகடனையும் கையில் கூட்டிவருவார். 

வாசலுக்கு வெளியிலோ அல்லது வீட்டினுள்ளோ இருந்து எனது தந்தை வருவதை நான் கண்டுவிட்டால் அவரது கரங்களில்தான் எனது விழிகள் கண் பதிக்கும் ஏனெனில் விகடன் அதில் குடிகொண்டிருக்கும், சுருட்டப்பட்டிருக்கும் புத்தகத்தின் ஓரங்களில் கொம்பு வைத்த விகடன் தாத்தா எனைப் பார்த்து சிரித்துக் கொண்டே எட்டிப் பார்ப்பதுபோல் இருக்கும்,

அப்படி வாங்கும் அந்தப் புத்தகத்தை ஓரிரு மணி நேரங்களில் முன் அட்டை முதல் பின் அட்டை வரை படித்து முடித்திருப்பேன். ஆங்காங்கே மண் வாசனை கொண்ட மனிதர்களின் சாகுபடி சாதனைகளைப் பட்டியலிட்டிருக்கும் விகடனின் வயிரறைகளின் பலவிடங்களில் பொம்மைப்பட மன்னன் மதன் உதிர்த்திருக்கும் நகைச்சுவை துணுக்குகள் எனது இதழ்கள் பிரிக்கும்  என்றால் அவர்  கைவண்ணம் கண்டு கலைநயம் கொண்ட கார்ட்டூன்கள் எனது விழிகளை விரிக்கும், அப்போது அவர் விகடனில் ‘வந்தார்கள் வென்றார்கள்’ என்ற புகழ்பெற்ற தொடர் வேறு எழுதிக் கொண்டிருந்தார்.

இதுபோக விகடனை நான் வாங்க மேற்கொள்ளும் சிரத்தைகள் அலாதியானது, வீட்டு உபயோகத்திற்காக கடையில் சாமான்கள் வாங்க அம்மா அவர்கள் தரும் காசில் ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும் மீதிச் சில்லறையை தவிர்த்து காசுகளாக கிடைக்கும் 25 பைசா, 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை ஒரு வாரத்தில் கிடைக்கும் இப்படியான சில்லறை காசுகளை கொஞ்சம், கொஞ்சமாக சேமித்து வைத்துக் கொள்வேன், 

பின்னர் அவை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் அந்த வார ஆனந்த விகடனை வாங்க காசு சேர்ந்து விட்டதை எண்ணி உள்ளம் குதூகளிக்கும், நாகை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான பாக்கம் கோட்டூர்தான் எங்கள் ஊர், 90’களில் எங்கள் ஊரில் சுமார் 10 கடைகள் இருப்பதே அரிதினும் அரிது, அதிலும் எந்தக் கடைகளிலும் பெரு நகரங்களைப் போன்று தனியாக பத்திரிக்கைகள் விற்கவெல்லாம் மாட்டார்கள், 

ஒவ்வொரு நாளும் சுமார் ‘11’ மணியளவில் அருகேயுள்ள திருப்புகலூர் (இது திருஞானசம்பந்தர் ,அப்பர் மற்றும் சுந்தரரால் தேவாரம் பாடப்பெற்ற தலங்களில் ஒன்றாகும்.) எனும் ஊரிலிருந்து திருநாவுக்கரசர் என்பவர் எங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தினசரி நாழிதழ்களை தேநீர் கடைகளுக்கும் இதர வீடுகளுக்கும் கொண்டுவந்து தருவார், அப்படி அவர் கொண்டு வருகையில் நாளிதழ்களோடு விகடன் குமுதம் போன்ற வாரப் பத்திரிக்கைகளையும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கொண்டு வருவார், சுற்று வட்டாரத்தில் உள்ள பல ஊர்களுக்குச் சென்று தினசரிகளை விற்றுவிட்டு இறுதியாகத் தான் எங்கள் ஊருக்கு வருவார். 

அவ்வாறு கொண்டு வருகிறவரை சுமார் அரைமணி நேரம் முன்னதாக முக்கிய சாலைக்குச் சென்று காத்திருந்து பிடிக்க வேண்டும் அன்று அவரை விட்டுவிட்டால் மறுநாள்வரை  அதுபோல காத்திருந்து அவரைக் காண வேண்டும். அதற்குள் அவர் கொண்டு வருகின்ற ஆனந்த விகடன் இதழை சுற்று வட்டாரத்திலுள்ள வேறேதேனும் ஊர்களில் எவரேனும் வாங்கி விட்டால் அவ்வளவுதான்! இனி அடுத்தவார இதழைத்தான் இனி காத்திருந்து வாங்க வேண்டிவரும் அந்தவார இதழை படிக்க முடியாத சூழலே உண்டாகும், 

பின்னாள்களில்  இதற்காகவே தந்தையிடம் கெஞ்சி கூத்தாடி தினசரிகளை அவர் எங்கள் வீட்டிற்கே வந்து போடும் சூழலை உருவாக்கிக் கொண்டேன் அப்போது எனக்கு ஆனந்த விகடன் தவறாமல் கிடைத்துவிடும் அல்லவா! ஆனால் காலப்போக்கில் தினமும் நாளிதழ்கள் வாங்கும் திறன் குறைந்து போனது. ஆனால் ஆனந்த விகடனின் பிரியப்பட்ட வாசகனாகிய எனக்கோ! அந்த இதழின் மீதான பிரியம் கூடிய நிலையில் தற்போது எப்படி ஆன்ட்ராய்டு கைபேசி இல்லாமல் சிரமம் ஏற்படுகிறதோ! அதுபோல் அப்போது ஒருவார விகடன் படிக்காது போனாலும் பெரும் கைசேதமாகத் தோன்றும் அந்தளவிற்கு விகடன் என் உள்ளத்தோடு நெருக்கமானான்.

இப்படியாக ஒவ்வொருவார விகடனுக்காக மீண்டும் முக்கியச் சாலையில் சைக்கிளோடு காத்திருக்க வேண்டிய நிலை, அப்போதுதான்  திருநாவுக்கரசு எனக்கு மிகவும் பரிச்சயமான நபராகிப் போனார். இப்போது அவரே எனக்காக ஒரு புத்தகத்தை எப்போதும் கையிருப்பாக வைத்திருக்கும் அளவிற்கு எனது ஆனந்த விகடன் மீதான பிரியத்தை அவர் புரிந்து கொண்டார். 

பின்னாளில் ஒருவாரம் முதல் ஓரிரு வாரங்கள் வரை வழியில் பார்க்கும் என்னிடம் அவர்  ஆனந்த விகடன் இதழை ஒப்படைத்து விட்டு காசு வாங்காமல் சென்றுவிட்டு பின்னர் மாதக் கடைசியில் நான்கு வாரங்களுக்கான புத்தகத்திற்கான காசை ஒருசேர வாங்கிக் கொண்டு செல்கின்ற அளவு அவருடன் எனக்கு நட்பு உருவானது. 

இப்படி ஒவ்வொரு வாரமும் புதிய ஆனந்த விகடனை கையில் ஏந்தும் அந்த நாள் அது ஆனந்த விகடனுக்கான நாளாக மாறியது, அந்த நாள் முழுதும் வீட்டை விட்டுச் செல்லாமல் அந்த புத்தகத்தை எனது விழிகளுக்கு விருந்தாக்கி உள்ளம் நிறைய உண்டு கண்கள் களிப்புற்ற பின்னரே எனது கால்கள் வாசல் நிலைக் கதவை விட்டுத் தாண்டும் அந்தளவு விகடன் எனது தோழனானான்.

ஒருமுறை வங்கி வேலையாக சென்றேன் அப்படி போகின்ற வழியில் திருநாவுக்கரசு என்னைக் கண்டுவிட்டு அந்த வாரம் வெளிவந்த ஒரு புதிய ஆனந்த விகடனை எனது கரங்களில் திணித்து விட்டுச் சென்றுவிட்டார் , அந்தப் புத்தகத்தோடு வங்கிக்குள் சென்றவன் கையோடு கொண்டு சென்ற காசோலையை வங்கி காசாளரிடம் அளித்து விட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருக்கும் அறையில் விகடனோடு அமர்ந்து அதனை புரட்ட ஆரம்பித்தேன், சிறிது நேரத்தில் காசாளரும் மற்ற காத்திருப்போருக்கு எல்லாம் பணம் வழங்கிவிட்டு எனது டோக்கன் எண்ணை அழைத்தாரா? இல்லையா? என்பதே தெரியாமல் புத்தகத்தோடு ஒன்றியிருந்தேன்,

அதற்கிடையில் காசாளரும் வங்கியில் வேறு வேலையாக சென்று விட்டு ஒருமணி நேரம் கழித்து திரும்பி வந்தார், அதற்கிடையில் புத்தகத்தின் ஒருபகுதியை படித்து முடித்து அங்கிருந்த கடிகாரத்தை கண்கள் காண திடுக்குற்றேன் காரணம் ஏறத்தாழ ஒருமணி நேரம் போனதே தெரியாமல் நான் புத்தகத்தில் முகம் புதைத்திருந்தேன் என்பதுதான் காரணம், பின்னர் காசாளரை அணுகி எனது டோக்கனை கொடுக்க அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு இவ்வளவு நேரமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றார். 

நான் வழிந்துகொண்டே அவரிடம் கையிலுள்ள விகடனை காட்டி புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன் சார் என்றேன் அவர் விழிகள் விரிய எனது கரங்களில் தவழும் விகடனை கண்டு வியந்து “ பரவாயில்லையே பொதுவாக வங்கிக்கு வரும் எல்லோரும் நேரமாகிறது என முனங்கிக் கொண்டே இருப்பார்கள், அல்லது எங்களிடம் நேரடியாக வந்து வாக்கு வாதம் செய்வார்கள், நீங்களோ! கூப்பிட்ட வேளையிலும் இந்தப் புத்தகத்தோடு ஒன்றி விட்டீர்கள் என்றால் இனி விகடனை எங்கள் வங்கியிலும் வாடிக்கையாளர்களுக்காக ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிப் போடலாம் என எங்கள் மேலாளரிடம் பரிந்துரை செய்யலாமா? “ என நினைக்கிறேன் என சொல்லிச் சிரித்தார்.  

எப்போதெல்லாம் நான் வீட்டின் கொள்முதல் தேவைக்காக பெரு நகரங்களுக்குச் செல்கின்றேனோ?, அப்போதெல்லாம் வீட்டில் வாங்கச் சொன்ன எந்த ஒன்றையும் மறந்தாலும் மறப்பேனேயன்றி விகடன் வாங்குவதை மட்டும் மறக்க மாட்டேன், பின்னர் வீட்டிற்கு வந்ததும் அதற்காக  எனக்கு தனி அர்ச்சனைகள் கிடைப்பதென்பது தனிக்கதை, ஆனால் நான் விகடனை வாங்குவதற்காகத்தான் வெளியூர் செல்லவே ஒப்புக் கொண்டேன் என்பது வீட்டில் யாருக்கும் தெரியாது. 

இதுபோல் என் வாழ்வில் வாசிப்பை நேசிக்கக் கற்றுக் கொடுத்ததில் விகடனின் பெரும்பங்கு உள்ளது எனது தனிமையின் வெற்றிடம் போக்கிக் கொள்ள விகடனின் வாசனையை வாசிப்பாக நுகர்ந்து என் பருவங்கள் கடந்துள்ளது என்பது மிகையல்ல.. 

-எண்ணமும் எழுத்தும், 

பாகை இறையடியான்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *