• August 18, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

வேள்பாரி படிக்க தொடங்கும் போது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் படிக்க தொடங்கினேன். முதலில் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை என்று தான் தோன்றியது. என் கணிப்பு தவறென்று காண்பித்தது கொற்றவை கூத்து களம் தான்.  அகுதை முதல் பறம்பு வரை ஒவ்வொரு குடிகளின் கதையும் என்னை சிலிர்க்கவைத்தது.

பாரி என்றாலே முல்லைக்குத் தேர் கொடுத்தவன் என தோன்றிய என் மனதில் அவன் தேருக்கு மட்டுமல்ல பல தேவதைகளுக்கு அடைக்கலம் கொடுத்தவன் என்றும் பாரியின் இரக்க குணம் அந்த பறம்பு மலையை விட பெரியது என்றும் தோன்றவைத்தார் ஆசிரியர் சு.வெங்கடேசன். வேள்பாரி என்னுள் பல மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

அதிலும் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்களின் வீரத்தை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி. ஆதினியின் அன்பு, அங்கவையின் அறிவு நுட்பம் , பொற்சுவையின் நேர்மை, மயிலாவின் காதல் மற்றும் சுகமதியின் விசுவாசம் என ஒவ்வொருவரையும் வேறு வேறு கோணத்தில் காட்டியது மிகச்சிறப்பு.

வீரயுக நாயகன் வேள்பாரி

காடுகள் பற்றிய பறம்பு மக்களின் அறிவு வியக்கத்தக்கது. காடு பற்றியும் காட்டில் உள்ள உயிரினங்கள் பற்றியும் வேள்பாரி மூலம் நானும் தெரிந்துகொண்டேன். 

இந்த தொடரில்  எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பறம்பு ஆசான் தேக்கன். அவரின் ஒவ்வொரு அசைவிற்க்குப் பின்பும் பறம்பின் நலமும் பறம்பு மக்களின் நலமும் அடங்கும். திரையர்களின் நடுவே அவர் போரிட்டதும், பாரிக்கு அடுத்தபடியாக பறம்பு மலையை நன்கு அறிந்தவரும், பறம்பை காக்க போரின் ஒவ்வொரு நாளும் அவர் எடுத்த முடிவுகளும், இறுதியாக பறம்பின் நலனுக்காக தன் உயிரை தானே மாய்த்துக்கொண்டதும் தான்  அவரின்  மிகச்சிறந்த  விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

இவையெல்லாவற்றையும் ஒருங்கே அமைந்தது போல் இருந்தது பாரியின் உருவம். போருக்கான முக்கிய காரணம் தேவாங்கு. பறவையே  என்றாலும் அதன் அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்துவது சரியன்று என இயற்கையின் பக்கம் நிற்கும் பாரி முற்றிலும் சரியானவனே. போரின் ஒவ்வொரு நாளிலும் ஒரு திருப்பம். அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று என்னை பல நாட்கள் உறங்காமல் செய்தது. போரில் இருக்கும் விறுவிறுப்பு போல காதலிலும் விறுவிறுப்பு காட்டியுள்ளார் ஆசிரியர். 

வேள்பாரி 100

 முருகன் – வள்ளி, எவ்வி – சோமக்கிழவி, பாரி – ஆதினி, நீலன் – மயிலா, உதிரன் – அங்கவை போன்ற ஒவ்வொரு காதலும் காவியமே. இந்த தொடரில் என்னை மிகவும் பாதித்த நிகழ்வு இரவாதன் மற்றும் பொற்சுவையின் மரணம். அறத்தை மட்டுமே பின்பற்றியதால் இருவரின் மரணமும் சதியால் நிகழ்ந்தது.  பாரியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த பொற்சுவை என்னுள் ஒரு படி மேலெழுந்து நிற்கிறாள்.தேவாங்கு என்ற விலங்கிற்காக , பாழியில் அடைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்திற்காக , முன்பகைக்காக என மூன்று பெரும் வேந்தர்கள் மும்முனை தாக்குதல் நடத்தியபோதும் அவற்றை தன் அறிவுக்கூர்மையால் வென்ற பாரி சிறுகுடி மன்னன் என்பதில் எனக்கு இருந்த ஆச்சரியம் இன்னும் தீரவில்லை. 

அறுபதாங்கோழி, காக்காவிரிச்சி,ஆட்கொல்லிமரம், சோமப்பூண்டு,பறக்கும் பாம்பு, தோகை நாய்கள், முயல் குருதியில் நாணேற்றப்பட்ட அம்பு, பாழ்க்கரண்டி ,மருந்து பூசப்பட்ட போர்வை மற்றும் கவசம் போன்றவை என்னை வியப்பில் ஆழ்த்த தவறியதில்லை.

இந்த தொடர் அன்பு, அறிவு, காதல், காமம், வீரம், வலிமை, துணிச்சல், தியாகம் போன்ற பலவற்றை பற்றி கூறினாலும் அறம் என்ற ஒன்றை வலியுறுத்தி தர்மம் வெல்லும் அதர்மம் அழியும் என நிரூபித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. 

சிறுகுடி மன்னனின் எழுச்சி பெரும் மாற்றத்தை கொடுக்கும் என்பதற்கு இந்த தொடர் ஒரு எடுத்துக்காட்டு. உறுதியான தீர்க்கமும் அறமும் நம்முடன் இருந்தால் இயற்கை என்றும் நம் பக்கமே என்பதற்கு காற்றும் காற்றியுமே சான்று. இதையெல்லாம் படிக்கும் போது எதிர்ப்பது யாராக  இருந்தாலும் அறவழியில் நின்றால் ஆண்டவனே நம்ம பக்கம் தான் என்கிற வசனம் நினைவிற்கு வருகிறது. 

நேராக பார்ப்பதை விட  ஆசிரியரின் கதை வழியே பறம்பின் அழகை கற்பனையில் பார்த்து வியந்தேன். பறம்பு மட்டுமில்லாமல் சேர, சோழ மற்றும் பாண்டிய நாட்டின் வனப்பும் மனதில் நிற்கின்றன. அவரின் வார்த்தைகளும் அதற்கான உவமைளும் மிகபிரமாதம். உண்மையில் வேள்பாரி அற்புதமான அறத்தை மையப்படுத்திய தொடர் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை என்பதே நிதர்சனம். இப்படிபட்ட படைப்பை நல்கிய சு.வெங்கடேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *