
வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் சாரநாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண் சாரநாத் காவல் நிலையத்தில் சமீபத்தில் ஒரு புகார் செய்துள்ளார். அதில், ‘‘ஷரப் ரிஸ்வி என்பவர் தான் ஒரு இந்து எனக் கூறி என்னுடன் பழகினார். அதை நம்பி திருமணம் செய்து கொண்டோம். திருமண செலவுக்காக ரூ.5 லட்சம் கொடுத்தேன். அதன் பிறகுதான் அவர் முஸ்லிம் என தெரியவந்தது. அத்துடன் என்னையும் அந்த மதத்துக்கு மாற வேண்டும் என கட்டாயப்படுத்திகிறார். இதற்கு மறுப்பு தெரிவித்து பணத்தை திருப்பிக் கேட்டதால் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் ரிஸ்வியை சாரநாத் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: பரூக்காபாத்தைச் சேர்ந்த ஷரப் ரிஸ்வி, சாம்ராட் சிங், அஜய் குமார் மற்றும் விஜய குமார் உள்ளிட்ட பெயர்களில் முகநூலில் போலியாக கணக்குகளை தொடங்கி உள்ளார். பின்னர் திருமண இணையதளங்களில் வரன் தேடும் பெண்களை அணுகி, தான் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். தன்னுடைய உண்மை முகம் தெரியவந்ததும் அந்த பெண்களுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளார். இதுபோல 12 பெண்களை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்துகொண்ட பிறகு பெண்களை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தி உள்ளதால், இவருக்கு மதமாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என தீவிரமாக விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.