
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாநிலச் செயலாளரை கட்சித் தலைமை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இவ்விவகாரம் குறித்து விரிவாக விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சி.பி.ஐ மாநில மாநாடு நடைபெறுவது வழக்கம், அந்த வரிசையில் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் மாநகரில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு மாநில மாநாட்டின் இறுதியிலும் புதிய மாநிலச் செயலாளரையோ… பொறுப்பில் தொடர்வோரை மீண்டும் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால் தற்போதைய மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அப்பொறுப்பில் தொடர்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. 2015-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2019, 2022 ஆகிய மாநில மாநாடுகளில் மீண்டும் தேர்வாகி மாநிலச் செயலாளராக 9 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார்.
கட்சி விதிகளின்படி 75 வயதை கடந்தவர்களையும், மூன்று முறை பொறுப்பு வகித்தவர்களை மாற்ற வேண்டும் என்பது விதி. 75 வயதையும் முத்தரசன் கடந்துவிட்டதால் அவரை மாற்றும் வாய்ப்புகள் இருக்கின்றன” என்றனர்.

நம்மிடம் பேசிய மாநிலக் குழு நிர்வாகிகள், “வயதுவரம்பை முத்தரசன் கடந்தாலும் மாநிலக் குழுவுக்கு மீண்டும் அவரையே தேர்வு செய்யும் அதிகாரமும் உண்டு. மூன்றில் இரு பங்கு நிர்வாகிகள் மீண்டும் முத்தரசனை ஆதரித்தால் மீண்டும் மாநிலச் செயலாளராக ஆக முடியும். அதை முத்தரசன் விரும்புகிறாரா.. கட்சி முத்தரசனை மீண்டும் தேர்ந்தெடுக்க விரும்புகிறதா என்பது ஆகஸ்ட் 18-ம் தேதி தெரியவரும். மாநிலச் செயலாளர்களுக்கான உத்தேச பட்டியலில் முன்னணி நிர்வாகிகளான மு.வீரபாண்டியன், நா.பெரியசாமி பெயர்கள் அடிபடுகின்றன” என்றனர்.