
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 63-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மதச்சார்பின்மையைக் காப்போம் என்ற சிறப்பு நிகழ்வு ஒன்று சென்னை காமராஜனர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், “ 40 ஆண்டு கால திருமாவளவனின் அரசியல் பயணம் சாதாரணமானதல்ல. இந்தியாவின் மாபெரும் பலவீனம் சாதியத் தடைகள். அதை நீக்கினால்தான் நாம் இந்தியராக ஒன்றிணைய முடியும்.
ஒடுக்கப்பட்ட மக்களை அரசியலில் ஈடுபடுத்துவதும், அவர்களை மையப்படுத்துவதும் எளிதானதல்ல. இதைச் செய்பவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துக்குறியவர்கள். அற்புதமானவர்கள். எனவே திருமாவளவனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியலா ஆதாயமா என்றால் திருமாவளவன் அரசியலைத் தான் தேர்வு செய்கிறார். அவரைப் பார்க்கும்போது இருக்கிறது. ஒரு கட்சியை உருவாக்கி வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர் 40 ஆண்டுகளுக்கு முன்பே அதைச் செய்து விட்டார். என் சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள்.
என்னை மல ஹாசன் என்பார்கள். மலம் குறித்து என் தாத்தா காந்தியிடம் கேட்டுப்பார். அவர் மலத்தை அள்ளிச் சுத்தம் செய்வார். அவரை பின் தொடரும் இந்த கமல் ஹாசனும் மலத்தை அள்ளி சுத்தம் செய்வேன். ஆனால் அதை உனக்காகச் செய்யமாட்டேன். எனக்காகச் செய்வேன். தினமும் நீங்களும் அதைத் தானே செய்கிறீர்கள். சாதி தான் என் முதல் எதிரி. திருமாவளவன் உருவெடுத்த பிறகுதான், ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைப்பதாக நான் நினைக்கிறேன்.” எனப் பேசினார்.