
பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா நடிகை டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்தார். ஆனால் அவர்கள் சில ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். டிம்பிள் கபாடியா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு தனியாகச் சென்றுவிட்டார். டிம்பிள் கபாடியா சென்ற பிறகு அனிதா அத்வானிதான் அவருடன் கடைசி வரை இருந்து கவனித்துக்கொண்டார். இதனால் இருவரும் காதலர்கள், நண்பர்கள் என்று அறியப்பட்டனர். ஆனால் அவர்களுக்குள் காதல் மற்றும் நட்பை தாண்டி கணவன் மனைவி உறவு இருந்ததை அனிதா அத்வானி இப்போது தெரிவித்துள்ளார்.
நடிகை அனிதா அத்வானி இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”நாங்கள் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திரைப்படத்துறையில் யாரும் அதனை பெரிதாக பேசவில்லை. அனைவரும் நாங்கள் நண்பர்கள் என்றே சொன்னார்கள். நான் அவருடன் இருப்பது அனைவருக்கும் தெரியும். எனவே நாங்கள் திருமணம் செய்து கொண்டதாக அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நாங்கள் நினைத்தோம். எங்களது திருமண சடங்குகள் வீட்டிற்குள் நடந்தது. வீட்டிற்குள் சிறிய கோயில் இருந்தது. அந்த கோயிலில் தங்கம் மற்றும் கருப்பு பாசி மணி அணிந்த தாலி செயினை அவர் எனக்கு அணிவித்தார்.
அதன் பிறகு எனது நெற்றியில் குங்குமம் வைத்தார். டிம்பிள் கபாடியாவிற்கு முன்பே நான் ராஜேஷ் கன்னா வாழ்க்கையில் வந்துவிட்டேன். ஆனால் அப்போது அவரை திருமணம் செய்யவேண்டாம் என்று முடிவு செய்தேன். அந்நேரம் நான் மிகவும் இளமையாக இருந்தேன். எனவே நான் ஜெய்ப்பூர் சென்றுவிட்டேன். டிம்பிள் கபாடியாவை அவர் முறைப்படி விவாகரத்து செய்து கொள்ளும் முன்பாகவே என்னை திருமணம் திருமணம் செய்து கொண்டார். ஒரு முறை அவர் என் முன்னிலையில் வேறு ஒரு பெண்ணை புகழ்ந்து பேசினார். உடனே நான் கோபித்துக்கொண்டு அவருடன் சண்டையிட்டேன். உடனே அவர் மக்கள் நான்கு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். பல காதலிகளை வைத்துக்கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.
உடனே அவரிடம் கடுமையாக சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றேன். அடுத்த நாள் போன் பண்ணி வீட்டிற்கு வரும்படி கூறினார். அயோத்தி தொடர்பான வழக்கில் ஏதோ தீர்ப்பு வர இருக்கிறது. எனவே வீட்டிற்கு வந்துவிடும்படி கூறினார். நான் வர முடியாது என்று சொன்னேன். ஆனால் உனக்கு எதாவது நடந்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று சொன்னார். அவர் இறந்தபோது அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் வேதனையாக இருந்தது. நான் வந்தால் உள்ளே விடக்கூடாது என்பதற்காக அங்கு அடியாட்களை நிறுத்தி இருப்பதாக எனது தோழிகள் மூலம் தெரிந்து கொண்டேன்.
அப்படி இருந்தும் நான் செல்வேன் என்று கூறினேன். ஆனால் நான் சென்றால் அவர்கள் உள்ளே விடமாட்டார்கள் என்று சொன்னார்கள். எனது தோழிகள் மற்றும் எனது ஊழியர்கள் நான் இறுதிச்சடங்கிற்கு செல்லவேண்டும் என்று சொன்னார்கள். போகும்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை வீடியோ எடுக்க கேமரா எடுத்துச்செல்லும்படி கூறினார்கள். ஆனால் அந்த துக்கமான தினத்தில் எப்படி அது போன்று செய்ய முடியும். எனவே நான் அங்கு செல்வதில்லை என்று முடிவு செய்தேன். தேவையில்லாமல் அங்கு பிரச்னையை ஏற்படுத்த விரும்பவில்லை.
ஆனால் அவர் இறந்த நான்காவது நாள் கோயிலில் அவருக்காக பிரார்த்தனை ஏற்பாடு செய்திருந்தேன்” என்று தெரிவித்தார். அனிதா அத்வானி முன்னாள் நடிகையாவார். அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ராஜேஷ் கன்னா டிம்பிள் கன்னாவை திருமணம் செய்தபோது அவருக்கு வெறும் 16 வயதாகும்.