• August 17, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர், வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங்கு ரோடு ஏவிபி பள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு போலீஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, ஆட்டோ அருகில் சென்று பார்த்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்வதும், அதனால், வலியால் அவர் துடித்து வருவதும் தெரியவந்தது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கோகிலா உடனடியாக ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உள்ளார். மருத்துவமனை செல்வதற்குள் அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள்கொடியை அகற்றி, தாய் சேய் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த வடமாநிலப் பெண்ணுக்கு பெண் காவலர் ஒருவர் பிரசவம் பார்த்து தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோகிலா

இதுகுறித்து காவலர் கோகிலா கூறுகையில், “சுதந்திர தினம் என்பதால் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். நள்ளிரவில் நாங்கள் சோதனை மேற்கொண்டு இருந்த பகுதிக்கு வந்த ஆட்டோவில் பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது வடமாநில பெண் என்பதும், அவர் பிரசவ வலியில் துடித்தும் தெரியவந்தது. உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவிக்கான ஏற்பாடுகளையும் செய்வதாகவும் என்னை ஆட்டோவில் வருமாறும் கூறினார். இதைத்தொடர்ந்து, ஆட்டோவில் செல்லும்போதே அப்பெண்ணுக்கு பிரசவமானது. நான் ஏற்கெனவே செவிலியர் படிப்பு முடித்திருந்ததால், என்னால் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முடிந்தது. மருத்துவமனைக்கு வருவதற்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

பிரசவம்

பின்னர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் தொப்புள்கொடி அகற்றி இருவரையும் சிகிச்சைக்கு சேர்த்தோம். நர்சிங் முடித்து இருந்தாலும் எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. அதனால், காவல் துறையில் இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க நான் படித்த படிப்பு உதவியாக இருந்தது” என்றார்.

பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலாவை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து தனது பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *