
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் வாலாந்தரவை ரயில் நிலையத்தை கடந்து வழுதூர் – பெரியபட்டிணம் செல்லும் வழியில் அமைந்துள்ள ரயில்வே கேட் அருகே வந்தது. அப்போது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. இதனால் அந்த பாதையில் சென்ற வாகன ஓட்டிகள் ரயில் கேட் திறந்து இருந்ததால் வழக்கம் போல் ரயில் பாதையை கடக்க முயன்றனர். அந்நேரத்தில் ரயில் ரயில்வே கேட் அருகே மெதுவாக வந்ததை கண்ட வாகன ஓட்டிகள் தண்டவாளத்தினை கடக்காமல் நின்றதுடன், தங்களை தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கை செய்து நிறுத்தினர்.
இந்நிலையில் மதுரை சென்ற ரயிலின் லோகோ பைலட் கேட் அருகே ரயிலை நிறுத்தினார். பின்னர் உதவி லோகோ பைலட் ரயில் எஞ்சினில் இருந்து இறங்கி கேட் கீப்பர் அறைக்கு சென்றார். அங்கு வந்த கேட் கீப்பர் ஜெய்சிங் மீனாவிடம் கேட் பூட்டப்படாமல் இருப்பதை கூறியுள்ளார். இதையடுத்து திறந்திருந்த ரயில் கேட் பூட்டப்பட்ட பிறகு அங்கிருந்து ரயில் மீண்டும் புறப்பட்டது.

விபத்து தவிர்க்கப்பட்டது எப்படி?
பொதுவாக ரயில்பாதைகளில் உள்ள கேட்களில் இண்டர்லாக் சிஸ்டம் மற்றும் நான் இண்டர் லாக் சிஸ்டம் என இரண்டு சிக்னல் முறைகள் பயன்பாட்டில் உள்ளது. இதன்படி இண்டர்லாக் முறையிலான கேட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன் ஒரு சிக்னல் நிறுவப்பட்டிருக்கும். ரயில் ஏதும் செல்லாத போது இந்த சிக்னலில் மஞ்சள் விளக்கு எரியும். அடுத்து வரும் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் பச்சை விளக்கும், கேட் மூடப்படாமல் இருந்தால் சிவப்பு விளக்கும் எரியும்.
இதனை கவனிக்கும் லோகோ பைலட் ரயிலின் வேகத்தை குறைத்து இயக்குவதுடன், கேட் மூடப்படாமல் இருப்பதை அறிவிக்க சைரனை ஒலிக்க செய்ய வேண்டும். இதன் பின்னரும் கேட் மூடப்படவில்லை எனில் வேகம் குறைக்கப்பட்ட ரயிலை, கேட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்திவிட்டு உதவி லோகோ பைலட்டை அனுப்பி கேட்டினை மூட வேண்டும். இதன் பின் அந்த ரயில் ரயில்வே கேட்டை கடந்து சற்று தூரத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ரயிலில் உள்ள கார்டு கிழிறங்கி மூடப்பட்ட கேட்டினை திறந்த பின் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும்.

இரண்டாவது முறையான நான் இண்டர்லாக் சிஸ்டத்தில் இத்தகைய சிக்னல் முறைகளே இருக்காது. இத்தகைய ரயில்வே கேட்கள் மூடப்படாத நிலையில், சமீபத்தில் கடலூர் அருகே நடந்த பள்ளி வேன் மீது ரயில் மோதியது போன்ற பெரும் விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்படும். நல்வாய்ப்பாக பெருங்குளம் – வழுதூர் இடையிலான ரயில்வே கேட் இண்டர்லாக் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டிருந்ததால் நேற்றைய தினம் அங்கு ரயில் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் பணி நேரத்தில் ரயில்வே கேட்டினை மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த கேட் கீப்பர் ஜெய்சிங் மீனாவிடம் மண்டபம் ரயில் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்திலும் அதிகாரிகள் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.