
இன்று திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
கடந்த வாரம், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லாபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் மேடையில் ராமதாஸிற்காக ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமதாஸ் அதில் பங்கேற்கவில்லை.
மேலும், அந்தக் கூட்டத்தில், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
‘நோ’ அன்புமணி
இந்த நிலையில் தான், இன்று சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி வருகிறார் ராமதாஸ்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் ராமதாஸின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.
‘மூச்சிருக்கும் வரை நானே தலைவராக தொடர்வேன்’ என்று முன்னர் ராமதாஸ் சொன்னதற்கு ஏற்ப அடையாள அட்டையில் அவர் புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருக்கிறது.
மேடையில் காந்திமதி!
அடுத்ததாக, கூட்டத்தின் மேடையில் ராமதாஸின் அருகில் அவரது மகள் காந்திமதி அமர்ந்திருக்கிறார்.
காந்திமதியின் மகனான முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டதில் தான் ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே மோதல்போக்கு தொடங்கியது.
இதையடுத்து, ஒரு கட்டத்தில் முகுந்தன் அந்தப் பதவியில் இருந்து விலகிவிட்டார்.
அதன் பிறகு, ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டங்களில் அடிக்கடி காந்திமதி வருவது அல்லது அவரது பெயர் அடிப்படுவது நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் காந்திமதிக்கு எதாவது பதவி அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.