
மும்பை: மும்பை ஜேஜே மருத்துவமனையில் இருந்து வங்கதேச கர்ப்பிணி கைதி ஒருவர் தப்பிச் சென்றார்.
போலி பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் பெற்றதற்காக வங்கதேசத்தை சேர்ந்த ரூபினா இர்ஷாத் ஷேக் (25) என்ற பெண்ணை மும்பை, வாஷி போலீஸார் கடந்த 7-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து இவர் பைகுல்லா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் 5 மாத கர்ப்பம் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்காக ஜேஜே மருத்துவமனைக்கு ரூபினா அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் மருத்துவமனை கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை கீழே தள்ளிவிட்டு ரூபினா தப்பிச் சென்று விட்டார். அவரை மும்பை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.