
வருகிற 18-ம் தேதி (நாளை) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மழை பெய்தது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காலையிலேயே மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்றும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.