• August 17, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: எனக்கு 55 வயதாகிறது. தினமும் வீட்டு வேலைகளை முடித்த பிறகு, மதியம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தூங்குகிறேன். இந்தத் தூக்கத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆனால், இது என் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கிறது. இரவில் என்னால் சரியாகத் தூங்க முடிவதில்லை, மிகவும் தாமதமாகவே படுக்கைக்குச் செல்கிறேன். இதை நான் எப்படிச் சமநிலைப்படுத்துவது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

இரவில் தூக்கமின்மை

பகலில் சிறிது நேரம் தூங்குவது என்பது அவ்வளவு மோசமான விஷயமெல்லாம் இல்லை. ஆனால், அந்தத் தூக்கமானது அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

20 நிமிடங்களைத் தாண்டாத பகல் தூக்கம் உண்மையில், நம் மூளையைப் புத்துணர்வடையச் செய்யும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக களைப்பாக உணர்பவர்களுக்கு, அதிலிருந்து மீண்டு, உடலும் மனமும் சகஜ நிலையை அடைய உதவும். 20 நிமிடங்களைத் தாண்டிய தூக்கம் என்பது சரியான விஷயமல்ல. அப்படி நீளும் தூக்கம், நிச்சயம் இரவுத் தூக்கத்தை பாதிக்கும்.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

பகலில் தூங்கும் வழக்கம் உள்ளோர், 2 மணிக்குள் தூங்கி எழும்படி பார்த்துக்கொண்டால், இரவுத் தூக்கம் பாதிக்கப்படாது. அதுவே 3- 4 மணிக்கு மேல் தூங்கினாலோ, மணிக்கணக்கில் தூங்கினாலோ, இரவுத் தூக்கம் நிச்சயம் பாதிக்கப்படும். அதன் விளைவாக அடுத்தநாள் வேலைகளில் தொய்வு ஏற்படும். தூக்க சுழற்சி பாதிக்கப்படும். அது தொடர்கதையாக மாறும்.

சிலர், வார நாள்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பதால், வார இறுதி நாள்களை வெளியே செல்வது, படம் பார்ப்பது போன்றவற்றுக்காகச் செலவழிப்பார்கள். அதனால் வழக்கமான தூக்க நேரம் தள்ளிப்போகும். அது ஆரோக்கியமான விஷயமல்ல. வார நாள்களோ, விடுமுறை நாள்களோ, எல்லா நாள்களிலும் ஒரே நேரத்தில் தூங்குவதைப் பின்பற்றுவதுதான் ஆரோக்கியமானது.

ஒரே நேரத்தில் தூங்குவதைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *