• August 17, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது, “திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும் இருக்கக்கூடிய நட்பு என்பது கொள்கை நட்பு. சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருக்கின்ற காரணத்தினால் நட்பும் வலுவாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்தில் இரு முகங்கள் தான் திராவிட இயக்கங்களும், பொதுவுடமை இயக்கங்களும். கருப்பு, சிகப்பு சேர்ந்து தான் திராவிட முன்னேற்ற கழகம். தி.மு.கவின் பாதி தான் கம்யூனிஸ்ட் கட்சி. கொள்கை உறவின் ஆழத்தை, தலைமுறை கடந்து நாம் சொல்லவேண்டும் அப்பொழுதுதான் பல தலைமுறைகள் காக்கப்படும். கொள்கை முரண்கள் ஒரு போதும் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. சேலம் சிறையில் கம்யூனிஸ்டுகள் 22 பேர் கொல்லப்பட்டபோது தந்தை பெரியாரும், அண்ணாவும் கடுமையாக கண்டித்து எழுதினர். சேலம் மத்திய சிறையில் சிறை தியாகிகள் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும். இந்த பணி நாளைய தினம் துவங்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு

நம்முடைய ஒற்றுமை தான் பலருடைய கண்களை உறுத்தி கொண்டுள்ளது. எத்தனை சதி செய்தாலும், குழப்பங்களை ஏற்படுத்தினாலும், போலி செய்திகளை பரப்பினாலும் ஒற்றுமையாக இருக்கிறார் என்று வாயில், வயிற்றில் அடித்துக்கொண்டு புலம்பி கொண்டு உள்ளார்கள். அதிலும் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் மீது திடீர் பாசம் வந்துள்ளது. அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? அவருக்கு என்ன உரிமை உள்ளது. தி.மு.கவை பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த இயக்கம்தான் இங்கிருக்கும் இயக்கங்கள். திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் இவற்றின் கொள்கை பற்றி தெரியாமல் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். தி.மு.கவுடன் கூட்டணி சேரும் தலைவர்களை மோசமாக கொச்சைப்படுத்துகிறார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்களை விட, திருமாவளவன் ஆகியோரை விட என்ன அதிகம் தியாகம் செய்து உள்ளீர்களா? இங்குள்ள தலைவர்களை விட பெரிய தியாகம் செய்து உள்ளீர்களா என்று நிரூபிக்க முடியுமா? ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற இயக்கங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உள்ள இயக்கங்கள். மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை, பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று அக்கறையும் நோக்கமும் இல்லை. கூட்டணி தலைவர்களை பற்றி அவதூறு பரப்பவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்ற மலிவான நோக்கத்துடன் அலைந்து கொண்டிருக்கிறார். கூட்டணியில் இருந்தாலும், நியாயமான கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் வைக்க ஒரு போதும் கம்யூனிஸ்ட் தோழர்கள் தவறியது கிடையாது. தி.மு.கவும், கம்யூனிஸ்ட்களின் கோரிக்கைகளை ஒருபோதும் புறக்கணித்தது கிடையாது. அவர்களது கோரிக்கைகளை கேட்கிறோம் விவாதிக்கிறோம். பலவற்றில் உடன்படுகிறோம் அதற்கான தீர்வை முன்னெடுக்கிறோம் இது தான் ஜனநாயகம். இதனால்தான் எங்களது கூட்டணி பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாதியவாதம், வகுப்புவாதம், மேலாதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையாக பணியாற்றுவோம், ஏனென்றால் நம்முடைய லட்சியம் பெரிது. ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள், சமூகநீதிக்கு எதிரானவர்கள் சமுதாயத்தை வெறுப்பவர்கள், நமது தோழமையை விரும்பவில்லை. அதனால் நமக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள், அவர்களின் சதி திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. ஜனநாயகம் தான் இறுதியில் வெல்லும், அதை வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஜனநாயக சக்தியான நமக்குத் தான் உள்ளது. ஜனநாயகத்திற்கு அடிப்படையான தேர்தலையே மத்திய பா.ஜ.க அரசு கேலிக்கூத்தாக்கி உள்ளது. மத்திய பா.ஜ.க அரசு தேர்தல் ஆணையத்தை கிளை அமைப்பாக மாற்றிவிட்டது. தன்னாட்சி பெற்ற தேர்தல் ஆணையத்தை சாவி கொடுத்தால் ஆடுகின்ற பொம்மையாக மாறிவிட்டது பா.ஜ.க. தேர்தல் ஆணையத்தின் நியமனத்தில் தான், சதி செய்கிறார்கள் என்று பார்த்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து சதியை துவங்கிவிட்டார்கள். மக்களாட்சியை காட்டுவதற்கு, சதியை அம்பலப்படுத்தி உள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சட்டம் வழங்கியுள்ள கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைபெற துவங்கும் முன்பாக, சுதந்திரமான, நேர்மையான வாக்காளர் பட்டியலை சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும். மத்தியில் பா.ஜ.க அமைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று எச்சரிக்கை எல்லாம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறையை வைத்து தனக்கு ஒற்று வராத எதிர்க்கட்சிகளை மிரட்டும் என்று கூறினோம் தொடர்ந்து நடத்துகிறார்கள். ரெய்டு aஎன்று சொன்னவுடன் வந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன பழனிசாமியா? எங்களை மிரட்ட நினைத்தவர்கள் எல்லாம் மிரண்டு போய் உள்ளார்கள். இதைவிட மோசமான அணுகுமுறை எல்லாம் பார்த்த இயக்கம் தான் திமுக. நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவர்கள், உங்களுடைய எண்ணம் எந்த காலத்திலும் நிறைவேறாது. வழக்கம்போல தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு தோல்வியை மட்டுமே தருவார்கள். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு உள்ளவர்கள், விழிப்புணர்வு மிக்கவர்கள், தமிழினத்திற்கும், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் உண்மையாக தொண்டாற்ற கூடியவர்கள் யார் என்று தெரியும். 2021 ஆம் ஆண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது போன்று, 2026 இல் நமது அணி தான் வெற்றி பெறும். இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் சாதனைகள் செய்வோம். அதற்கு துணையாக அனைவரும் இருக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கினால் எப்படிப்பட்ட வெற்றி கிடைக்கும். நம்முடைய உழைப்புக்கு முன்னாடி எப்படிப்பட்ட சதி செய்கிறவர்களும் நிற்க கூட முடியாது. ஜனநாயகம் வெல்ல அனைத்து தோழர்களுக்கும் ரெட் சல்யூட்” என்று பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *