• August 17, 2025
  • NewsEditor
  • 0

பொதுவாக நாம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் உப்பு, சோடியம் மற்றும் குளோரைடால் ஆனது. இது உடலில் சோடியத்தின் அளவை சரியாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தின் குளோரைடு அளவை பராமரிக்கவும் உணவில் சேர்க்கப்படுகிறது. இது ஓர் அத்தியாவசிய தாது உப்பு. இதுதான் உடலின் திரவ மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. உடலுக்கு இன்றியமையாத உப்பின் நன்மைகளைப்பற்றி அறியாமல், அது உடலில் அதிகமானால் என்னென்னக் கெடுதல்கள் ஏற்படும் என்பதைப்பற்றி மட்டும் வாசித்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர்.

உப்பு

அதோடு நிற்காமல், உணவில் இருந்து உப்பை எவ்வாறு நீக்குவது என்று செயற்கை நுண்ணறிவிடம் கேட்டிருக்கிறார். பிறகு அது சொன்னபடி, உப்புக்குப் பதிலாக சோடியம் ப்ரோமைடு என்ற பொருளை ஆன்லைனில் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். விளைவு உடல் நலப்பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் பேசினோம்.

’’மனித உடலில் குளோரைடு சராசரியாக 130- 133 (mEq/L) வரை இருக்க வேண்டும். இதற்கு சோடியம் குளோரைடு உதவியாக உள்ளது. சோடியம் குளோரைடை, அதாவது உப்பை முழுமையாக உணவில் இருந்து நீக்கக்கூடாது.

உப்பில்லாத உண்வு
உப்பில்லாத உண்வு

கல்லீரல் நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் உடலில் ஏதேனும் நோய் இருந்தால் மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவில் உணவில் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி நலமாக இருப்பவர்கள் உணவில் சோடியம் குளோரைடை அளவை தேவையைவிட குறைக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. தவிர, அது உடலுக்கு ஆபத்தானதும்கூட.

ரத்தத்தில் சோடியம் அளவு குறைவதை ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) என்போம். சாதாரணமாக உடலில் 143 (mEq/L) என்ற அளவில் சோடியம் இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால் குமட்டல், தலைவலி மற்றும் குழப்பம் போன்றவை ஏற்படும்.130 (mEq/L)-க்கு கீழே போக ஆரம்பித்தால், உடலில் மூளை சம்பந்தப்பட்ட நோய்க்கான அறிகுறிகளை உண்டாகும். 120-110 (mEq/L)-க்கு கீழே சோடியம் அளவு சென்றால் வறட்சி, உணர்வு குறைவது, ஏன் கோமா வரைகூட செல்ல வாய்ப்புள்ளது. நீண்ட நாள் உணவில் உப்பு சேர்க்கவில்லை என்றால், உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம்.

பொதுநல மருத்துவர் ராஜேஷ்

சோடியம் குளோரைடுக்கு பதிலாக சோடியம் ப்ரோமைடு எடுத்துக் கொள்ளும்போது மனக்குழப்பம், மயக்கம், பிரம்மை , மன நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், தடிப்பு, கொப்பளங்கள் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம்.

இணையதளங்கள் மற்றும் Chatgpt போன்றவற்றை தகவல்கள் தெரிந்து கொள்ளப் பயன்படுத்தலாம். மற்றபடி, அவற்றிடம் மருத்துவ ஆலோசனைகளைக் கேட்பதோ அல்லது அந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவதோ பாதுகாப்பு கிடையாது. சில நேரங்களில் இணையதளங்கள் கொடுக்கும் விவரங்கள் சரியானதாகக்கூட இருக்கலாம். ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்; எதற்கு பயன்படுத்த வேண்டும்; ஏன் பயன்படுத்த வேண்டும் என்பனவற்றை மருத்துவர்களால்தான் வழிகாட்ட முடியும்.

உடலின் அறிகுறிகளைச் சொல்லி செயற்கை நுண்ணறிவிடம் மருத்துவ ஆலோசனைக் கேட்பது அதிகரித்துவிட்டது. அதுவும் செயற்கை நுண்ணறிவுப் பட்டியலிடுகிற நோய்கள் தங்களுக்கு இருப்பதாக நம்பி மக்கள் தேவையற்ற பயத்தை மனதுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். இதுவும் மக்களுக்கு நல்லதல்ல’’ என்கிறார் டாக்டர் ராஜேஷ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *