
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, லோக் சபா தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதனை நிரூபிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.
அதேபோல், பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் (SIR) உயிரோடிருப்பவர்களின் பெயர்களும் சில, இறந்தவர்கள் என வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
இதனால், பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களையும், நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு கண்டிப்புடன் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுபோன்றவற்றால் தேர்தல் ஆணையத்தின்மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் என குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றன.
ஆனால், பா.ஜ.க-வும் தேர்தல் ஆணையமும் அதை மறுத்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பே பிரச்னை இருக்கிறதென்று வெளிப்படுத்தியிருந்தால் அப்போதே சரி செய்திருக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், SDM நிலை அதிகாரிகளான தேர்தல் பதிவு அதிகாரிகள் (EROs), பூத் நிலை அதிகாரிகளின் (BLOs) உதவியுடன் வாக்காளர் பட்டியலைத் தயாரித்து இறுதி செய்யப்படுகிறது.
வாக்காளர் பட்டியலின் சரியான தன்மைக்கான பொறுப்பைத் தேர்தல் பதிவு அதிகாரிகள், பூத் நிலை அதிகாரிகள் ஏற்றுக்கொள்கின்றனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அதன் டிஜிட்டல் மற்றும் காகிதத்தாலான பிரதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிரப்பட்டு, அனைவரும் பார்க்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் (ECI) இணையதளத்தில் வைக்கப்படுகின்றன.

இப்பட்டியல் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதைத் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு ஒரு மாத காலம் முழுமையாக வழங்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்ட பிறகு, அதன் டிஜிட்டல் மற்றும் காகிதத்தாலான பிரதிகள் மீண்டும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் பகிரப்பட்டு, ECI இணையதளத்தில் வெளியிடப்படும்.
அதன்பிறகும் அதில் ஆட்சேபனை இருந்தால், முதலில் மாவட்ட நீதிபதியிடமும், அடுத்து மாநில நிர்வாக அதிகாரியிடமும் மேல்முறையீடு செய்யலாம்.
ஆனால், தற்போது எழுப்பப்பட்டிருக்கும் பிரச்னைகளைப் பார்க்கையில், சில அரசியல் கட்சிகளும் அவற்றின் பூத் லெவல் முகவர்களும் (BLA) சரியான நேரத்தில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யவில்லை, பிழை இருந்தால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டவில்லை எனத் தெரிகிறது.
சமீபத்தில், சில அரசியல் கட்சிகளும் தனிநபர்களும் கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் உட்பட, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் குறித்து பிரச்னைகளை எழுப்புகின்றனர்.

வாக்காளர் பட்டியல் மீது ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய காலத்திலேயே இதைத் தெரிவித்திருக்க வேண்டும். அதற்குத்தான், அரசியல் கட்சிகளிடமும், வேட்பாளர்களிடமும் வாக்காளர் பட்டியல் பகிரப்படுகிறது.
இப்பிரச்னைகளை அப்போதே எழுப்பியிருந்தால், அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் தேர்தலுக்கு முன்பே சரிசெய்திருக்க முடியும்.
அரசியல் கட்சிகள் மற்றும் எந்தவொரு வாக்காளராலும் வாக்காளர் பட்டியல்கள் பரிசீலனை செய்யப்படுவதைத் தொடர்ந்து வரவேற்கிறோம்” என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.