
கல்பெட்டா: கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை செய்பவர் ஜெயேஷ் குமார். இவர் கல்பெட்டா புது பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அம்மா லாட்டரி கடையில் உள்ள ஊழியர்களிடம் 5 தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைக்கும்படி கூறியுள்ளார். அதற்கான பணத்தை பிறகு கொடுப்பதாக கூறியுள்ளார். அதன்படி ஜெயேஷ் குமாருக்கு 5 லாட்டரி டிக்கெட்டுகளை ஊழியர் ஸ்வாதி சத்யன் தனியாக எடுத்து வைத்து விட்டார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை குலுக்கல் நடைபெற்றது. அதில் ஜெயேஷ் குமாருக்காக எடுத்து வைத்திருந்த 5 டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்திருந்தது. உடனடியாக குமாரை அழைத்து லாட்டரி கடை ஊழியர் ஸ்வாதி தகவல் தெரிவித்தார். இதுகுறித்து குமார் கூறும்போது, ‘‘ஸ்வாதி கூறியதும் முதலில் நான் நம்பவில்லை. அவர் கிண்டலடிக்கிறார் என்று நினைத்தேன். இந்த பரிசு பணத்தில் நான் வீடு வாங்குவேன்’’ என்றார்.