
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. தமிழர் எழுச்சி நாளாக விசிக கொண்டாடும் இந்த நிகழ்வில் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் பேசிய திமுக அமைச்சர் சேகர்பாபு, “ஒரு போராளியின் சரிதம் எப்படி இருக்கும் என்றால் ஒரு தலைவனாக மாத்திரம் ஒரு போராளியை காண முடியாது. ஒரு போராளி தலைவனுக்கு அடுத்தபடியாக படை நடத்துகின்ற தளபதியாகவும் இருக்க வேண்டும்.
படை நடத்துகின்ற தளபதியாக மாத்திரம் இருந்து விட்டால் போதாது மதி நுட்பம் மிக்க வீரர்களை அமைத்துத் தருகின்ற ஒரு அறிவாளியாக இருக்க வேண்டும். மதி நுட்பங்களை வகுத்து தருகின்ற அறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது தலைவன் அளிக்கின்ற உத்தரவில் களத்திலே நின்று களமாடுகின்ற ஒரு தொண்டனாகவும் இருக்க வேண்டும்.

தலைவனாக, தளபதியாக, மதி நுட்பத்தோடு வியூகங்களை வகுத்துத் தருகின்ற அறிவாளியாக, ஒரு தொண்டனாகவும் காட்சி தருகின்ற ஒரு தலைவன் உண்டென்றால் தமிழக அரசியல் வரலாற்றில் அண்ணன் திருமாவளவன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
அவர் கடந்து வந்த பாதை… 45 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கின்றார். அவர் சந்தித்த சோதனைகளைப் போல் மற்ற இயக்கத்தை நடத்துகின்ற தலைவர்கள் சந்தித்திருந்தார்கள் என்றால், இந்நேரம் அரசியலிலே சந்நியாசம் பூண்டிருப்பார்கள்.
அந்த அளவு சோதனைகளை சாதனையாக்கிய ஒரு மகத்தான தலைவனுக்கு இன்று பிறந்தநாள். திராவிட இயக்கத்தின் சித்தாந்தத்தை, தலைவர் தளபதியின் கரங்களை உயர்த்திப் பிடிக்கின்ற திருமா பல்லாண்டு நோய் நொடி இல்லாமல் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்த்தி இயற்கையும் இறைவனும் அவருக்கு துணை நிற்க வேண்டும் என்று கூறுகிறேன்” எனப் பேசினார்.