• August 16, 2025
  • NewsEditor
  • 0

79-வது சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

அத்துடன் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும், இளம்பெண்களும் குவிந்திருக்கின்றனர். அதனால் கடற்கரை மற்றும் சுற்றுலாத்தலங்களில் வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

சடலமாக பவன்குமார், பிரெட்ஜ்வால் மேத்தி, மேகா

அதன்படி பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 25 வயது பவன்குமார், கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியைச் சேர்ந்த 29 வயது மேகா, ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிரெட்ஜ்வால் மேத்தி மற்றும் 23 வயதான ஜீவன், குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான அதிதி, உள்ளிட்ட 12 நண்பர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.

முத்தியால்பேட்டை பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிய இவர்கள், புதுச்சேரியின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்திருக்கின்றனர்.

அதனடிப்படையில் அவர்கள் அனைவரும் இன்று காலை 8.30 மணியளவில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்குச் சென்றனர்.

அப்போது அனைவரும் கரையோரம் குளித்த நிலையில், பவன்குமார், மேகா, பிரெட்ஜ்வால் மேத்தி, அதிதி, ஜீவன் உள்ளிட்ட 5 பேரும் பாதுகாப்பு எச்சரிக்கை கயிற்றைத் தாண்டி ஆழமான பகுதிக்குச் சென்று குளித்திருக்கின்றனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி தத்தளித்த 5 பேரும், தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.

போலீஸார் விசாரணை

அவர்களைப் பார்த்து கரையில் இருந்த நண்பர்களுடம் கூச்சலிட, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி 5 பேரையும் கரைக்கு இழுத்து வந்தனர்.

ஆனால் பவன்குமார், மேகா, பிரெட்ஜ்வால் மேத்தி மூவரும் அங்கேயே உயிரிழந்துவிட, ஆபத்தான நிலையில் இருந்த அதிதி மற்றும் ஜீவனை சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல் உடற்கூராய்வு சோதனைக்காக இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகிழ்ச்சிக்காக வரும் சுற்றுலாப் பயணிகள் அரசின் கட்டுப்பாடுகளை மீறி தங்களை மாய்த்துக் கொள்வதுடன், தங்களைச் சார்ந்தவர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தி விடுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *