
ஆகஸ்ட் 14ம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் மற்றும் நேட்டோ தலைவர்களை அழைத்து, ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Trump – Zelenskyy உரையாடல்
அலாஸ்காவில் புதினுடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாஷிங்டன் டிசிக்கு செல்லும்போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அழைத்துப் பேசியிருக்கிறார் ட்ரம்ப்.
அவர்களது உரையாடல் சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்டதாகக் கூறப்படுகிறது. அதில், “போர் நிறுத்தத்தை விட விரைவான அமைதி ஒப்பந்தம் சிறந்தது” என ட்ரம்ப் ஜெலென்ஸ்கியிடம் முன்மொழிந்ததாக சர்வதேச அரசியல் பத்திரிகையாளர் ஆக்ஸியோஸ் பராக் ராவிட் தெரிவிக்கிறார்.
President Trump told Zelensky and NATO leaders that Putin doesn't want a ceasefire and prefers a comprehensive agreement to end the war. According to a source on the call Trump said: "I think a fast peace deal is better than a ceasefire"
— Barak Ravid (@BarakRavid) August 16, 2025
பிரான்ஸ் ரியாக்ஷன்
மேலும் ட்ரம்ப் நட்புநாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் புதினுடனான உரையாடல் குறித்த அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார். இந்த உரையாடலில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் ஜெர்மனி, பின்லாந்து, போலந்து, இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு பிறகு, போர் தொடரும் வரை உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்க வேண்டுமென்றும், அமைதி ஒப்பந்தம் நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டுமென்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியிருக்கிறார்.
உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய முத்தரப்பு சந்திப்புக்கான டிரம்பின் முன்மொழிவை உக்ரைன் ஆதரிப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
அதற்கு முன்னர் வருகின்ற திங்கள்கிழமை ஆகஸ்ட் 18 ஜெலன்ஸ்கி அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையில் ட்ரம்ப்பை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோவுக்கு அழைத்துள்ளார் புதின். இதில் ட்ரம்ப் உறுதியாக பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.