
சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்கு முன், அந்த இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், 13 நாளாக போராட்டம் தொடர்ந்தது.
வழக்கு
இந்நிலையில், தேன்மொழி என்பவர், நடைபாதையை ஆக்கிரமித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், ‘நடைபாதை, சாலை ஆகியவற்றை ஆக்கிரமித்து யாரும் போராட்டம் நடத்த முடியாது. அதனால், போராட்டக்காரர்களை அதிகாரிகள் அங்கிருந்து அகற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கடுமையான முறையில் கையாளப்பட்டு கைது செய்யப்பட்டனர். பெண்கள் என்று கூட பாராமல் தரதரவென இழுத்து பேருந்தில் ஏற்றப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் ஊடகங்களில் வெளியாகி எளிய மக்கள் மீதான ஆளும் அரசின் அதிகார தொனியை நாட்டிற்கு வெளிச்சம் போட்டு காட்டின.
அம்பேத்கர் பேரன் பதிவு
இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக செயல்பாட்டளர்களும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், இது குறித்தான தனது கண்டனத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலினை குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நடப்பது மிகவும் கொடூரமானது!.
இந்த அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளமுடியாதது!
தலித்துகள் மனிதர்கள் இல்லையா ?
உங்கள் காதுகள் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் இருக்க முடியுமா?”
என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.
What is happening to sanitation workers in Chennai is absolutely horrible! @mkstalin, this is OPPRESSION!
NOT ACCEPTABLE!Are Dalits not humans!? Can your ears not listen to the demands of the #SanitationWorkers?#SanitationWorkersProtest pic.twitter.com/LzmEGadL5V
— Prakash Ambedkar (@Prksh_Ambedkar) August 15, 2025