
சென்னை: சுதந்திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் தனிச் சிறப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாக தேவி, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி சு.லட்சுமி ஆகியோருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க பணிக்கான பதக்கங்கள் 21 பேருக்கு வழங்கப்படுகின்றன.