• August 15, 2025
  • NewsEditor
  • 0

மும்பை அருகில் உள்ள கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியில் சுதந்திரத்தினத்தன்று இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சுதந்திரத்தினத்தன்று இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கும் நடைமுறையை இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கத் தயாராக இல்லை.

இறைச்சிக் கடை

கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியைத் தொடர்ந்து நாசிக், கோலாப்பூர், ஜல்காவ், நாக்பூர், மாலேகாவ் மாநகராட்சிகளும் சுதந்திரத்தினத்தன்று இறைச்சிக்கடைகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன. கால்நடைகளை அன்றைய தினம் வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதற்குத் தடை கிடையாது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுதந்திரத்தினத்தன்று மட்டுமல்லாது விநாயகர் சதுர்த்தியன்றும் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக ஜல்காவ் மாநகராட்சி தெரிவித்து இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத், “சத்ரபதி சிவாஜியும், அவரது படையினரும் பருப்பு குழம்பும், அரிசி சோறும், நெய்யும் சாப்பிட்டுவிட்டு சண்டைக்குச் செல்லவில்லை. அவர்கள் இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டுத்தான் போருக்குச் சென்றனர்.

தற்போதைய அரசு மகாராஷ்டிராவைப் பலவீனமானதாகவும், ஆண்மையற்றதாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

சுதந்திரத்தினத்தன்று இறைச்சிக்கடைகளுக்குத் தடை விதிக்கும் மாநகராட்சிகளின் முடிவுக்குத் துணை முதல்வர் அஜித்பவாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இறைச்சிக் கடை
இறைச்சிக் கடை

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே, ”நாங்கள் சைவம் சாப்பிட வேண்டுமா அசைவம் சாப்பிட வேண்டுமா என்று எங்களுக்கு நீங்கள் உத்தரவிட முடியாது. நாங்கள் நிச்சயம் அசைவம் சாப்பிடுவோம். நவராத்திரியின் போது சில கோயில்களில் அம்மனுக்கு மீன், இறைச்சி படைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம் பூரியில் இருக்கும் விமலா தேவி கோயிலில் தசராவையொட்டி அங்குள்ள புனித குளத்திலிருந்து மீன் பிடித்து அதனைச் சமைத்து அம்மனுக்குப் படையல் போடுகின்றனர். பின்னர் அது பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருக்கும் தார்குல்ஹா தேவி கோயிலில் அம்மனுக்கு ஆடு பலியிடப்படுகிறது. அந்த இறைச்சியைச் சமைத்து அம்மனுக்குப் படையலிட்டு பிறகு பக்தர்களுக்கு அது பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள முத்தப்பன் கோயிலில் மீனும், கள்ளும் படையலிடப்பட்டு பின்னர் அது பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அஸ்ஸாம் காமாக்யா தேவி கோயிலில் சைவம் மற்றும் அசைவம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம் தாராபிட் கோயில் பிரசாதத்தில் மட்டன், மீன் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவது பாரம்பர்யமாக நடந்து வருகிறது.

இறைச்சிக் கடை
இறைச்சிக் கடை

இறைச்சிக்கடைகளுக்கு அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் கோழிப்பண்ணை அதிபர்கள் மத்திய அரசுக்குப் புதிய கோரிக்கை விடுத்துள்ளனர். இறைச்சிக்கடைகள் என்றெல்லாம் திறந்திருக்கலாம் என்று ஒரு பட்டியலை மத்திய அரசே வெளியிட்டால் இது போன்ற பிரச்னைகள் இருக்காது என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

நவராத்திரி, மகாசிவராத்திரி, காந்தி ஜெயந்தி, வால்மிகி ஜெயந்திகளுக்கு இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இது தவிர ஜெயின் பண்டிகையின் போது இறைச்சிக்கடைகளுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று ஜெயின் மதத்தினர் கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சில உள்ளாட்சி அமைப்புகள் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *