
கர்நாடகா மாநிலம், பெல்தங்கடி பகுதியில் அமைந்துள்ள தர்மஸ்தலா என்ற கோவிலில் நூற்றுக்கும் மேலான உடல்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தக் கோவிலின் முன்னாள் ஊழியர் அளித்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த ஊழியர் இந்தியா டுடே செய்தித் தளத்துக்குச் சில திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் 70-80 உடல்களைத் தன்னை அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார். அவற்றில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகள்.
அவர் கூறிய தகவல்கள்
-
தள எண் 13-ல் 70-80 உடல்களை அடக்கம் செய்ய தன்னை வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார். “நாங்கள் மிகவும் ஆழமான குழியில் உடல்களைப் புதைத்தோம். இன்னும் பல உடல்கள் மலையில் புதைக்கப்பட்டன” என்று கூறியுள்ளார்.
-
உள்ளூர் நிர்வாகம் மற்றும் கிராம பஞ்சாயத்துக்குத் தெரியாமல் நேரடியாக கோவில் நிர்வாகத்திடம் இருந்து உத்தரவுகள் வந்ததாகக் கூறியுள்ளார்.
-
உடல்கள் பெரும்பாலும் மலைகளிலும் பழமையான சாலைகளிலும் புதைக்கப்பட்டதாகவும், கல்லறைகளில் புதைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். “அவர்கள் எங்கெல்லாம் எங்களுக்குக் காட்டினரோ, அங்கெல்லாம் நாங்கள் தோண்டினோம்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

-
பெரும்பாலான உடல்களில் பாலியல் வன்முறைக்கான தடயம் இருந்ததாகக் கூறியுள்ளார். அவர்கள் புதைத்ததில் 100-ல் 90 உடல்கள் பெண்களுடையது என்றும் தெரிவித்துள்ளார்.
-
இதுவரைத் தோண்டிய 10க்கும் மேற்பட்ட தளங்களில் ஒன்றில் மட்டுமே மனித உடல்கள் கிடைத்துள்ளது குறித்து, ‘மலை அரிக்கப்பட்டுள்ளது, கட்டுமானங்கள் மற்றும் காடு வளர்ந்ததாலும் கிடைக்காமல் போகலாம்’ எனக் கூறியுள்ளார்.
-
இவர்கள் உடல்களைப் புதைப்பதை பகலில் சில உள்ளூர் வாசிகள் பார்த்திருப்பதாகவும், ஆனாலும் எந்தக் கேள்வியும் எழவில்லை, யாரும் நிறுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
-
கோவில் மீது குற்றம்சாட்டும் இவர் உடல்களிலிருந்து நகைகளைத் திருடினார் என்றும் கோவில் மீது அவதூறு பரப்புகிறார் என்றும் எழும் விமர்சனங்களை மறுத்துள்ளார். “நான் ஒரு இந்து, கோவில் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாயமான பெண்கள்…கோயிலைச் சுற்றிப் பிணங்கள்… கர்நாடகாவின் ‘தர்மஸ்தலா’வில் நடந்தது என்ன?