• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் கலைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுவரும் சூழலில் “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும்! தனியார்மயமாக்குவதைக் கைவிட்டு தமிழகம் தழுவிய அளவில் அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!” என அறிக்கை வெளியிட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

Thirumavalavan அறிக்கை:

சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது , ஆறாவது மண்டலங்களைச் சார்ந்த தூய்மைப்பணியாளர்கள் சுமார் 1950 பேர் தங்களைப் பணிநிரந்தரம் செய்யக் கோரி, கடந்த ஆக-01 முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாநகராட்சி செயலகமான “ரிப்பன் மாளிகை” எதிரே அமர்ந்து அப்போராட்டத்தை இரவு-பகலாக இடையறாமல் நடத்தினர். இதனையறிந்ததும் உடனே நமது கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், எம்எல்ஏ அவர்கள் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து விசிக’வின் ஆதரவை வெளிப்படுத்தினார்.

தூய்மைப் பணியாளர்கள் கைது

அதனையடுத்து ஆக-05 அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் நான் போராடும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். அவற்றை அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்கிறேன் எனவும் கூறிவிட்டு வந்தேன்.

அதன் பின்னர், ஆக-06 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இடதுசாரி கட்சிகளின் தலைவர்களோடு சந்தித்தபோது தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசினேன். அதன்பின்னரும் மாண்புமிகு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோருடனும் தொடர்ந்து பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தினேன்.

‘உழைப்போர் உரிமை இயக்கத்தின்’ தலைவர் தோழர் கு. பாரதி மற்றும் அவரது தந்தையும் தொழிற்சங்கத் தலைவருமான தோழர் குமாரசாமி ஆகியோருடனும் இது குறித்து தொலைபேசிவாயிலாகக் கலந்துரையாடினேன். அவர்கள் முன்வைத்த வேண்டுகோளின்படி, முதற்கட்டமாக ‘பணியாளர்கள் அனைவரையும் ஏற்கனவே உள்ள திட்டத்தின்படி (NULM),தொடர்ந்து பணிசெய்ய அனுமதிக்க வேண்டுமெனவும்; அதன்பின்னர் பணிநிரந்தர கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டுமெனவும் ‘ அமைச்சர்களிடம் தொலைபேசிவாயிலாக வலியுறுத்தினேன்.

அப்போது, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பணி நிரந்தரம் செய்யும்படி தீர்ப்பு வழங்கினால், அதன்படி அரசு செயல்படும் என அவர்கள் பதில் அளித்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

இந்நிலையில், ஆக-13 அன்று உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் போராட்டத்தைக் காவல்துறை அனுமதிக்கும் இடத்தில்தான் நடத்திடவேண்டுமென்றும்; தற்போதைய இடத்திலிருந்து போராடுவோரை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் பொதுநல வழக்கில் தீர்ப்பளித்தார்.

அத்துடன், பணிநிரந்தரம் குறித்த வழக்கில் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படுமெனவும் கூறியிருந்தார். இத்தகைய சூழலில், காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் தூய்மைப்பணியாளர்களைக் கைது செய்து போராடும் களத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில்- தூய்மைப்பணியாளர்களுக்கு களத்தில் துணையாக நின்றவர்களில் சிலர், காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும்; இழிவாகப் பேசி அவமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. காவல்துறையின் மனித உரிமைகளுக்கு எதிரான இந்தப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

கைதுசெய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் அனைவரையும் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுதலை செய்தாலும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறைப்படுத்திட அரசு முயன்ற நிலையில், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது.

அத்துடன், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், தூய்மைப்பணியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை செய்துள்ளார். அதாவது, பணிக்காலத்தில் உயிரிழந்தால் ரூ. 10 இலட்சம் காப்பீடு, கட்டணமில்லாமல் காலை உணவு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உதவித்தொகை, சுயதொழிலுக்கு ரூ. 3.50 இலட்சம் மானியம், நகர்ப்புறங்களில் மூன்றாண்டுகளுக்குள் முப்பதாயிரம் குடியிருப்புகள், கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் முன்னுரிமை என முதல்வர் பல அறிவிப்புகளைச் செய்துள்ளார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

அதேவேளையில், தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டுகிறோம். தனியார்மயப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு அவர்கள் அனைவரையும் தமிழகம் தழுவிய அளவில் பணிநிரந்தரம் செய்ய முன்வரவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

‘பிற துறைகளில் இதே கோரிக்கை எழும் என்று கருதி இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிட அரசு தயங்கவேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறோம். தூய்மைப் பணியாளர்களைப் பிறதுறை பணியாளர்களுடன் ஒப்பிட வேண்டாமெனவும்; இவர்கள் ஆற்றும் பணியின் தன்மையைக் கருத்தில்கொண்டு இவர்களுக்குச் ‘சிறப்பு முன்னுரிமை’ அடிப்படையில் பணிநிரந்தரம் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *