• August 14, 2025
  • NewsEditor
  • 0

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும் ஏ.டி.ஆர் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது.

ஏற்கெனவே, இரண்டு தினங்களில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் விரிவான வாதங்களை முன் வைத்திருந்த நிலையில், இன்று மனுதாரர்களின் சார்பில் இறுதி வாதங்களை முன்வைக்க வழக்கறிஞர்கள் நிஜாமுதீன் பாஷா, சோயப் ஆலம் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

Election Commission – Bihar SIR

அப்போது, “ஒருவரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குகிறார்கள் என்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால், அதைக்கூட தேர்தல் ஆணையம் தெரிவிக்க மறுக்கிறது.

தன்னிச்சையாகத்தான் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தில் வெறும் 0.37 சதவிகிதம் பேருக்குதான் கணினி பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டிருக்கிறது.

இப்படி அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கூட நிறைய சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஒரே நாளில் பல்லாயிரம் ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் கையாள்வதாகக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது” என வாதங்களை முன்வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, நேற்றைய தினம் சமூக செயற்பாட்டாளர் யோகேந்தர் யாதவ், ஏராளமான வாக்காளர்கள் இறந்து போய்விட்டதாகவும், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஆவணங்களுடன் கூறினார்.

மேலும், “அதை உடனடியாக சரிபார்க்கச் சொல்லியிருக்கிறோம். சுமார் 7.89 கோடி வாக்காளர் சரிபார்ப்பு படிவங்கள் பெறப்பட்டது.

22 லட்சம் பேர் இறந்து விட்டதன் காரணமாக அவர்களது பெயர் நீக்கம் உள்ளிட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது” என நீதிபதிகளிடம் கூறினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது பேசிய நீதிபதிகள், “நீங்கள் 65 லட்சம் பேரை நீக்கியிருப்பதாகவும், அதில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும் கூறுகிறீர்கள்.

ஆனால், இன்னொரு பக்கம் உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை எதிர் தரப்பினர் ஆதாரத்துடன் கூறியிருக்கிறார்கள். லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் அதன் விவரங்களை நீங்கள் ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்.

அதே நேரத்தில் ஆதார் அட்டை என்பது குடியிருப்பு மற்றும் தனி அடையாளத்துக்கான ஆவணமாகக் கருதப்பட வேண்டும்” எனக் கூறிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில், “வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் யார் யார் என்ற விவரங்களைத் தனது இணையதளத்தில் அடுத்த நான்கு நாள்களுக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் யார்? அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன?நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை? புலம்பெயர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை எத்தனை? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இதில், மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். இணையதளத்தில் வெளியிடப்படும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் எளிதில் தேடும் வகையில் இருக்க வேண்டும் வேண்டும்.

உத்தரவு
உத்தரவு

மக்கள் அதிகம் வாங்கக்கூடிய உள்ளூர் மொழி செய்தித்தாள்களில் இந்த நீக்கப்பட்ட விவரங்கள் தொடர்பான விளம்பரம் கொடுக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் மூலமாக வாக்காளர் விவரங்கள் மற்றும் அது சேர்க்கப்படும் நடைமுறைகள் குறித்த தகவல்களை ஒளிபரப்ப வேண்டும்.

மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் சமூக ஊடக கணக்குகள் இருந்தால் அதிலும் இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு அலுவலகங்களில் உள்ள பலகைகளில் எழுதி வைக்க வேண்டும்.

மிக முக்கியமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விரும்புவோர் தங்களது கோரிக்கையை வழங்கும் பொழுது ஆதார் அட்டைகளையும் ஆவணமாக வழங்கலாம் என விளம்பரம் செய்ய வேண்டும்.

இவையனைத்தையும் ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் கட்டாயம் செயல்படுத்தியிருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *