• August 14, 2025
  • NewsEditor
  • 0

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகைக்கு முன்பு போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவு வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் இத்தகைய செயலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இவ்வாறிருக்க, இன்று காலையில் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார், முதல்வர் ஸ்டாலின்.

அக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், அமைதியாகப் போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் 6 திட்டங்களை வரவேற்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் இரா. முத்தரசன், “துப்புரவு தொழிலாளர்களுக்குப் பல நலத்திட்டங்களை முன்வைத்து நிதித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது.

துப்புரவு தொழிலாளர்களுக்கு பல சமூகப் பாதுகாப்பு திட்டங்களை தனது செலவில் மேற்கொள்ள அரசு முன் வந்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் தமக்கான வேலைப் பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிப் போராடுகிறார்கள்.

தொழிலாளர் என்ற தகுதி வழங்கப்பட்டால், மேற்கண்ட பாதுகாப்புகள் அனைத்தும் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

CPI இரா.முத்தரசன்

தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைப்பதாலேயே, பிரச்னை எழுந்துள்ளது.

குப்பைகள் நிரந்தரமானவையாக இருக்கும்போது, தொழிலாளர்கள் தற்காலிகமானவர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதைக் கருத்தில் கொண்டால், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காத்திராமல் அரசே இப்பிரச்சனையைப் பேசித் தீர்க்க இயலும்.

பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல், போராடும் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுக்கு வரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *