
தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் சந்திரன் – சுகன்யா தம்பதியர். இவர்களது மகன் சாய் பிரகாஷ் (13) உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்த பின்பு பள்ளியில் உள்ள விளையாட்டு திடலில் சிறுவன் விளையாடுவது வழக்கம். அதன்படி கடந்த 7 ஆம் தேதியன்று கால்பந்து விளையாடியதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் திபேஸ் (19) என்ற கல்லூரி மாணவர் ஈட்டி எறிதல் பயிற்சிக்காக ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளியில் பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் திபேஸ் வீசிய ஈட்டி தவறுதலாக சிறுவன் சாய் பிரசாத்தின் தலையில் குத்தி உள்ளது. இதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது. தொடர்ந்து செயற்கை சுவாசத்தின் மூலம் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சாய் பிரசாத் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் ஈட்டி பாய்ந்து 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.