• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்ததற்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின்மீது அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றன.

இந்த நிலையில், அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான கௌதமி, “கூலி படம் பார்க்க நேரமிருக்கிறது, மக்களின் கோரிக்கைகளை கேட்க நேரமில்லையா?” என முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் கைது – கூலி படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கௌதமி, “தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும், தூய்மைப் பணியாளர்களை, நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்திருப்பது, ஸ்டாலின் குண்டர் அரசின் அராஜகத்தின் உச்சம்.

ஸ்டாலின் அவர்களே, ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததைப் போல, உங்கள் உறவினர் கலாநிதிமாறனின் கூலி திரைப்படத்தைப் பார்த்து அதை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமிருக்கிறதா? உங்களை வாக்களித்து முதல்வராக்கிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க நேரமில்லையா?

நீங்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கும் பொதுமக்களுக்கு இதுதான் கதியா?

வாக்கு கேட்டு, அதே மக்களை மீண்டும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களா?

காவல்துறையை வைத்து, நீங்கள் நிகழ்த்தும் அயோக்கியத்தனங்களை உடனடியாக நிறுத்துங்கள்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள்.” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *