
தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கும் புதுச்சேரியில், ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், `தேசிய கல்விக் கொள்கையின்படி 2030-ம் ஆண்டுக்குள் பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது இலக்கு.
ஆனால், 2023-24-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உங்கள் புதுச்சேரி மாநிலத்தில், 10,054 ஆயிரம் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்தியிருப்பதாக பதிவாகியிருக்கிறது.
அதனால் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு உங்கள் தலைமையில் தீவிர நடவடிக்கைகள் வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து `10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டனர்! – அதிர்ச்சி கொடுக்கும் மத்திய அரசு’ என்ற தலைப்பில் நம் இணையப் பக்கத்திலும், `பள்ளிப் படிப்பை நிறுத்திய 10,000 மாணவர்கள்… அம்பலப்படுத்திய மத்திய அமைச்சர் கடிதம்… புதுச்சேரி கல்வித்துறை அவலம்’ என்ற தலைப்பில் 10.08.2025 தேதியிட்ட ஜூ.வி இதழிலும் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
அந்த விவகாரம் பேசுபொருளானதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், `எதிர்க்கட்சிகள் குறை கூற வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதத்தின் புள்ளி விபரங்களை எடுத்து வைத்துப் பேசுகின்றனர்.
புதுச்சேரியில் 69 மாணவர்கள்தான் பள்ளி இடைநிற்றல் செய்திருக்கிறார்கள். ஆனால் 10,054 பேர் என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய கல்வி அமைச்சகம் 2023-24-ல் மாணவர்களுக்காக ஒரு போர்ட்டலை உருவாக்கியிருக்கிறது.
பள்ளி மாறும் மாணவர்கள் அதில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் மாணவர்கள் அதில் பதிவு செய்யவில்லை. அதை இடைநிற்றல் என்று கணக்கில் எடுத்திருக்கின்றனர். அதை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.
அதேபோல சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுவதும் உண்மை இல்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது. எதிர்கட்சிகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தனர்.
ஆனால் அமல்படுத்தப்பட்ட முதல் ஆண்டே மாணவர்கள் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றனர். மனசாட்சி இல்லாமல் அரசியல் நாடகத்தை தொடர்ந்து ஆடுகின்றனர்” என்று தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு அறிக்கை மூலம் பதிலடி கொடுத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, `முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசியிருக்கிறார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம். 10,054 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் என்று தவறுதலாக வந்திருக்கிறது என்றும், 69 மாணவர்கள்தான் பள்ளி இடைநிற்றல் செய்திருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட 10,054 இடைநிற்றல் தகவல் உண்மை இல்லை என்றால், ஒன்றிய கல்வி அமைச்சர் தவறான தகவலை வெளியிட்டதாக அமைச்சர் நமச்சிவாயம் ஒப்புக் கொள்வாரா ? அதை அறிக்கையாக வெளியிடுவாரா என்பதை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூற வேண்டும்.’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.