• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்யப்பட்டதற்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின்மீது அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றன.

அந்த வரிசையில், திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம், தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் கைது

அந்த அறிக்கையில் பெ.சண்முகம், “பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரவோடு இரவாக காவல்துறை நடத்திய இந்த ‘அப்புறப்படுத்துதல்’ முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும்.

ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கைகளுக்காகத் தொழிலாளர்கள் போராடுகிற போது காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகுமுறையும் அரசின் அணுகுமுறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்புகளும் மூர்க்கத்தனமாகவே இதைக் கையாண்டுள்ளது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களைக் காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதை கேள்வி கேட்கச் சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகச் சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக் கொண்டே அலைவதும் நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நடவடிக்கைகள்.

போராட்டக்குழுவுடன் CPIM மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம்
போராட்டக்குழுவுடன் CPIM மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம்

தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசியவர்களையும், ஆதரவு தெரிவிக்க வந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், தாக்குவதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் உடனடியான மற்றும் நேரடி தலையீட்டின் மூலம் தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும்.

அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” அறிவித்திருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *