
மதுரையில் அரசியல் கட்சிகளின் மாநாடு, சாதி மத அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரண்டு வந்ததை பார்த்த நமக்கு, ‘தகவல் பெறும் உரிமைச் சட்ட’ ஆர்வலர்கள் நடத்திய மாநாட்டுக்கு ஆர்வலர்கள் திரண்டு வந்ததது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தவறு செய்யும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இன்றைய நிலையில் பார்த்து அஞ்சும் ஒரே ஆயுதம், 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ‘தகவல் பெறும் உரிமைச் சட்டம்’ தான். அந்தளவுக்கு படித்தவர், பாமரர், பணக்காரர், ஏழை, சாதி மத வேறுபாடின்றி மக்களுக்கு இச்சட்டம் பயன் தந்து கொண்டிருக்கிறது.
இச்சட்டத்தின் மூலம் யாருக்கும் அஞ்சாமல் ஊழல்களை, முறைகேடுகளை, அம்பலப்படுத்தியும் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற தமிழகம் முழுவதுமுள்ள முன்னோடி ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் முதல் ஆரம்ப நிலை ஆர்வலர்கள் என கலந்துகொண்ட மாநாடு மதுரை தமுக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி சிறப்பாக நடந்தது.
இந்த சட்டத்தை கொண்டு வர போராடிய அருணா ராய், நிகில் டே, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோருடன் அறப்போர் இயக்க ஜெயராமன், பேராசிரியர் பழனிதுரை, ‘காமன் மேன்’ முருகேசன், ஆர்.டி.ஐ கேப்டன் தியாகராஜன், ஆர்.டி.ஐ பயிற்றுநர் மதுரை ஹக்கீம் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்
கலந்துகொண்ட ஆர்வலர்களும், பொதுமக்களும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசுத்துறைகளுக்கு 5000 மனுக்களை எழுதி அங்கிருந்தே அனுப்பியது ஆச்சரியப்படுத்தியது.

நம்மிடம் பேசிய ஆர்.டி.ஐ முன்னோடி செயற்பாட்டாளர்கள் எஸ்.பி.தியாகராஜன், மதுரை கே.ஹக்கிம், “2005-ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புக்கூறல் தன்மையையும் ஊக்குவிப்பதற்கு முக்கிய கருவியாக செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், பொது மக்களின் தகவல் அணுகலை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளன.
இது குறித்து பல அச்சுறுத்தலை சந்தித்தாலும் தகவல் பெறுவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆர்.டி.ஐ மனு எழுதுவதற்கும், மேல் முறையீடு செய்வதற்கும் அலுவலகங்களுக்கு சென்று கள ஆய்வு செய்வதற்கும் ஒவ்வொரு ஊராகச் சென்று பயிற்சியும் அளிக்கிறோம்” என்றனர்.
இந்நிகழ்வில் பேசிய என்.சி.பி.ஆர்.ஐ பொறுப்பாளர் நிகில் டே, “நம் காசு நம் கணக்கு என்ற முழக்கம் ராஜஸ்தானில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது, அங்கு மக்களுக்கு ஆர்.டி.ஐ-யை பயனுள்ளதாக இருந்தது” என்றார்.
“ராஜஸ்தானில் ஆர்.டி.ஐ அருங்காட்சியகம் ஒரு ஹெக்ட்டாரில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்ற ஆர்.டி.ஐ சட்டம் உருவாக காரணமாக இருந்த அருணா ராய், ஏழு ஆண்டுகள் கலெக்டராக பணியாற்றிவிட்டு, விருப்ப ஓய்வு பெற்று மக்களுடன் நேரடியாக செயல்பட்டதற்கான காரணத்தை பகிர்ந்துகொண்டார்.

கணக்கை கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது!
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பேசும்போது, ” மத்திய மாநில அரசுகள் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுகிறது. அதனால் அரசின் அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு மக்களுக்கு உரிமையுள்ளது. ஜி.எஸ்.டி சட்டம் கொடுமையானது, இட்லிக்கு 7 சதவிகிதம் வரி போடுகிறார்கள். ஜி.எஸ்.டி மூலம் பத்து லட்சம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இதில் 40 சதவிகிதம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களிடமிருந்து வருகிறது. மக்களிடம் வரி வசூலிக்கும்போது, அதன் கணக்கை கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது. பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ. 840 கோடி செலவிடப்பட்டுள்ளது தகவல் பெறும் உரிமைசட்டத்தின் மூலம்தான் பெறப்பட்டது. ஆர்.டி.ஐ சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மட்டும் போதாது. அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். நான் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக இருந்தபோது பரிந்துரைத்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், வெறும் காகிதத்தில் எழுதிக் கேட்டாலே போதும் என்று கொண்டு வந்தோம். ஆனால, இபோது கட்டணம் வசூலிக்கிறார்கள்.
அரசின் சில ரகசியங்கள், தனி நபரின் பிரச்னைகள் குறித்து கேட்கக் கூடாது என்று ஆர்.டி.ஐ சட்டத்தில் விதி விலக்கு கேட்கிறார்கள். ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவு வந்தபிறகு ரகசியம் என்பதே இல்லை. செல்போனை வைத்தே அனைத்து தவல்களையும் பெற முடியும். அதே நேரம் ஆர்.டி.ஐ சட்டத்தை சிலர் தவறாகவும் பயன்படுத்துகின்றனர். ஆர்.டி.ஐ குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். மக்களின் வரி பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிப்பது ஆர்.டி.ஐ-யின் மையமான நோக்கமாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பொது நிதியில் சம்பளம் பெறும் அனைவரிடமும் கணக்கு கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது” என்றார்.

ஆர்.டி.ஐ மனு அளிக்கும் முறை அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் கொண்டுவரவேண்டும், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் முறையீடு செயப்படும் வழக்குகள் அனைத்தும் 120 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.