
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை போலீஸார் கைது செய்து அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தி வருகின்றனர். மும்பை தானேயில் பாபு அப்துல் என்பவரை போலீஸார் கைது செய்திருந்தனர். அவரை போலீஸார் பங்களாதேஷ் பிரஜை என்று தெரிவித்தனர். பாபு அப்துலிடம் இந்திய பிரஜை என்பதை நிரூபிக்க தேவையான ஆதார் கார்டு, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இருந்தது. பாபு அப்துல் தன்னை ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள பாபு அப்துல் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து போலி ஆவணங்கள் எடுத்துள்ளார்.
அவரது மொபைல் போனை ஆய்வு செய்தபோது அவர் பங்களாதேஷில் பிறந்திருந்தார் என்பதற்கான சாட்சியம் கிடைத்தது. அதோடு அடிக்கடி பாபு அப்துல் பங்களாதேஷ் பிரஜைகளை தொடர்பு கொண்டு இருந்ததும் தெரிய வந்தது. அதோடு அவரது மொபைலில் பல பங்களாதேஷ் போன் நம்பர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. பாபு அப்துல் ஆதார், பான் மற்றும் வாக்காளர் ஐடி ஆவணங்களின் நம்பகத்தன்மை விசாரணையில் இருக்கும்போது, அவை சட்டப்பூர்வமான குடியுரிமைக்கான போதுமான சான்றாகக் கருதப்பட முடியாது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் தலைமறைவாகலாம், அல்லது மற்றொரு தவறான அடையாளத்தைப் பெறலாம்.
மேலும் அது விசாரணையைத் தடுக்கும் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்” என்று அரசு வழக்கறிஞர் மேகா பஜோரியா கூறினார். பாபு அப்துல் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜோதிராம் யாதவ், பாபு அப்துல் ஒரு உண்மையான இந்திய குடிமகன் என்றும், அவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். பிறப்புச் சான்றிதழ் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்பட்டது. சிவில் ஒப்பந்ததாரரான சர்தாரிடம் உத்யோக் ஆதார் அட்டை மற்றும் குமாஸ்தா உரிமமும் உள்ளது. 2013 முதல் ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி மற்றும் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்.
அவரது ஆவணங்கள் வருமான வரி பதிவுகள், வங்கிக் கணக்குகள், பயன்பாடுகள் மற்றும் வணிகப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.”என்று குறிப்பிட்டார். இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அமித் போர்கர்,”இந்திய குடியுரிமைக்கான கோரிக்கை மனுக்கள் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஆராயப்பட வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதால், மட்டும் ஒருவர் இந்திய குடிமகனாக மாறிவிட முடியாது. இந்த ஆவணங்கள் அடையாள அட்டையாகவும் அல்லது சேவைகளைப் பெறுவதற்காகவே உள்ளன. மனுதாரர் இந்திய குடியுரிமை சலுகைகளைப் பெறுவதற்காக வேண்டுமென்றே அடையாளத்தை மறைத்து போலி ஆவணங்களை உருவாக்கி இருக்கிறார்.
குடியுரிமைச் சட்டம் குடியுரிமையைப் பெறுவதற்கும் இழப்பதற்கும் ஒரு நிரந்தர அமைப்பை வகுக்கிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான சட்டப்பூர்வ வழிகளில் குடியுரிமை பெறுவதை தடை செய்கிறது. குடியுரிமை கேட்கும் ஒருவர் குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறாரா என்பது உட்பட – பிறப்பு, வம்சாவளி, பதிவு, அல்லது ஏதேனும் சிறப்பு விதிகள் மூலம் போலி அடையாளம் மற்றும் தோற்றம் பற்றிய குற்றச்சாட்டுகள் இருந்தால், UIDAI உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசுத் துறைகளால் கூட முறையான சரிபார்ப்பு தேவைப்படுகிறது.
இந்த வழக்கு இன்னும் கவனமாக சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது”என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.