
பாட்னா: 'எனது படம் இடம்பெற்ற டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?' என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை நோக்கி வாக்காளர் பட்டியல் முறைகேடு சர்ச்சையில் பிரபலமான மின்டா தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரியங்கா காந்தி, ஆர்.சுதா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மின்டா தேவி மற்றும் அவரது படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்தனர். டி-ஷர்ட் பின்புறத்தில் ‘124 நாட் அவுட்’ என்று எழுதப்பட்டிருந்தது. பிஹார் வாக்காளர் பட்டியலில் 124 வயது மின்டா தேவியின் பெயர் முதல்முறை வாக்காளராக இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.