• August 13, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

கடந்த பாகத்தில் 1970 களில் திருச்சியின் மெயின்கார்ட்கேட் பகுதியில் உள்ள எங்கள் குடியிருப்புப் பகுதியை பற்றி விவரித்தேன்.. அந்தப் பகுதியின் தனித்துவமான மனிதர்கள், கடைகள், மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கினேன்.

காலனியின் விருந்தாளிகள்

காலனிக்கு வரும் வேடிக்கை காண்பிப்போருக்கும் குறைவில்லை. எனக்கு இன்னும் ஞாபகம் இருப்பது மாதம் ஒரு முறை காலனி வீடுகளுக்கு வருகை தரும் குரங்காட்டி தான். அந்த குரங்கிற்கு அழகாய் ஒரு சொக்காயும் பாவாடையும் தைத்து போட்டிருக்கும். குரங்காட்டி இடும் கட்டளைகளை எல்லாம் அந்த குரங்கு சிரமேற்கொண்டு செய்து முடிக்கும். ஒரு வீட்டின் முன் காட்சி முடிந்தவுடன் அடுத்த வீட்டிற்கு செல்லும் பொழுது அந்த குரங்கு குரங்காட்டியின் தோள் மேல் ஏறி அமர்ந்து கொள்ளும். அந்த குரங்காட்டி ஒவ்வொரு வீடாக செல்ல அவரை தொடர்ந்து காலனி சிறுவர்கள் படையும் செல்லும்.  காசு போடாமல் சில வீடுகளில் கொடுக்கப்படும் பழைய சாதத்தையும் அந்த குரங்காட்டி மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொள்வார்.

அடிக்கடி எங்கள் வீட்டின் பின் புறம் யானை ஒன்று செல்லும். யானை வரும் பின்னே: மணியோசை வரும் முன்னே என்பது நூறு சதவிகிதம் உண்மை. அந்த யானை வரும் முன்னரேயே மணியோசை வந்துவிடும். குமார் அண்ணன் எங்களிடம் சொல்வார்,” யானையை சின்னக் கண்ணாரே, என்று அழைத்தால் யானைக்கு பிடிக்காது. அது அவ்வாறு அழைப்பவரை ஞாபகம் வைத்து மிதித்து கொல்லும்” என்று. அன்று முதல் யானை எங்கள் வீட்டின் பின்னால் செல்லும் போது சுவர் ஏறி பார்ப்பதை மட்டும் வழக்கமாக கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அண்ணன் சொன்னதை பரிட்சித்துப் பார்க்க யானை, வீட்டு பின்புறத்தை கடக்கும்பொழுது உரத்த குரலில்,” சின்ன கண்ணாரே” என்று கத்திவிட்டு வீட்டினுள் வந்து ஒளிந்து கொண்டேன். நல்ல வேளை. அந்த யானை கடைசிவரை என்னை தேடி வரவில்லை.

சில நேரங்களில் பாம்பாட்டி காலனிக்கு வருவார். ஒவ்வொரு வீடாக சென்று பல் பிடுங்கப்பட்ட நாகப்பாம்பை காண்பித்து பைசா வசூல் செய்வார்.

பாம்பாட்டி என்றவுடன் என் ஞாபகத்துக்கு வருவது மாயாஜாலம் செய்யும் பாம்பாட்டி மந்திரவாதி தான். மெயின் ரோடில் பாய் கடைக்கு பக்கத்தில் ஒரு சிறிய பொட்டல் நிலம் இருந்தது. மெயின் கார்ட் கேட் வரும் பாம்பாட்டிகள், பாட்டு பாடும் பெண்கள் அந்த இடத்தையே தங்கள் திறமையை காண்பிக்க தேர்ந்தெடுப்பர். 

பாம்பாட்டி மகுடி ஊத ஆரம்பித்த உடனே பாம்பாட்டியை சுற்றி கும்பல் கூடி விடும். பாம்பாட்டி விதவிதமான பாம்புகளை காண்பித்த வண்ணம் இருப்பார். அதில் முக்கியமாக நாகப்பாம்பும், இரட்டைத் தலை பாம்பு எனப்படும் மண்ணுளி பாம்பும் இருக்கும். அந்த மண்ணுளி பாம்பு கடித்துவிட்டால் குஷ்டம் வரும் என்ற பரவலான நம்பிக்கை. உண்மையில் இந்த இரட்டை தலை பாம்பு எனப்படும் பாம்பு வகைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.

சித்தரிப்புப் படம்

பாம்பாட்டியின் அருகில் ஒரு கயிற்றில் கீரிப்பிள்ளை ஒன்று கட்டப்பட்டு இருக்கும். கீரிப்பிள்ளை பாம்பு சண்டை கடைசியில் காண்பிக்க இருப்பதாக சொல்லிய வண்ணம் இருப்பார். நானும் எத்தனையோ பாம்பாட்டிகளின் காட்சியை பார்த்துவிட்டென், ஆனால் ஒன்றில் கூட கீரிப்பிள்ளை – பாம்பு சண்டையை பார்த்ததில்லை. இந்த பாம்பாட்டியை ஏன் மந்திரவாதி என்று அழைப்போமென்றால் அவர் முன்னே பலதரப்பட்ட அளவுகளில் மண்டை ஓடுகள் இருக்கும்.

சில வேளைகளில் குடுகுடுப்பை காரர் எங்கள் காலனிக்குள் நுழைந்து விடுவார். அவன் கறுப்பு நிறத்தில் ஒரு கோட் அணிந்து கீழே ஒரு கைலி அணிந்திருப்பார்.  அந்த கோட்டில் சில ஒட்டுகள் போடப்பட்டிருக்கும். காசு இல்லையென்றால் அரிசி வாங்கிக் கொள்வார்.

குடுகுடுப்பைகாரர் இரவு வேளைகளில் வந்து குறி சொல்வார் என்பது பொதுவான நம்பிக்கை.  அவர் சொல்லும் குறிகளை நாம் மறைந்து நின்று அவர் கண்ணில் படாதவாறு கேட்டுக் கொள்ள வேண்டுமாம். ஏனெனில் இரவு வந்தவர் அடுத்த நாள் காலையும் அதே வீடுகளுக்கு வருவார். ஆனால் காலையில் வரும் அவருக்கு முந்தைய இரவு சொன்னது ஞாபகம் இருக்காதாம். நாம் அவரிடம் அவர் முந்தைய இரவு சொன்ன குறிகளை சொன்னால் அவர் விளக்கம் தருவார் என்பதும் பொதுவான நம்பிக்கை. முந்தைய இரவு சொன்னது ஞாபகம் இல்லாத குடுகுடுப்பைகாரர் எவ்வாறு சரியாக குறி சொன்ன வீடுகளுக்கு வருகிறார் என்ற என் சந்தேகத்திற்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.

வேறு சில வேளைகளில் குடுகுடுப்பைகார இனத்தின் சகோதரர்களான பூம்பூம் மாட்டுக்காரர்கள் காலனிக்கு வருகை தரும் விருந்தாளிகளாய் இருப்பர். இவர்களும் ஒட்டு போட்ட கறுப்பு கோட் அணிந்து தலையில் முண்டாசு அணிந்திருப்பர். இவர்கள் வீடுகளுக்கு முன்னே நின்று கொண்டு கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மாடு தலையாட்டி ஆமோதிக்கும். குடும்ப தலைவிகளின் சந்தோசமே இவர்களின் சாப்பாட்டுக்கு வழி வகுக்கும்.

சில நேரங்களில் ஜோஸ்யம் பார்க்கும் குருவிக்கார பெண்கள் காலனிக்கு வருவார்கள். ஏதாவதொரு கண்கட்டு வித்தையை காண்பித்து வீட்டில் இருக்கும் பெண்களை பயமுறுத்தி தங்கள் வியாபாரத்தை இவர்கள் செய்வார்கள். பயந்து போகும் பெண்களும் அவர்கள் கேட்கும் காசையோ அல்லது பொருட்களையோ கொடுப்பார்கள்.

காலனிக்கு வரும் வேறு சில விருந்தாளிகளில் ஒருவர் தான் ஈயப் பாத்திரங்களிலும் வெண்கலப் பாத்திரங்களிலும் ஓட்டை அடைப்பவர். அவர் காலனி வீடுகளில் சென்று ஓட்டை விழுந்த பாத்திரங்களை சேகரித்துக் கொள்வார். பின் நிழலுக்காக எங்கள் வீட்டின் எதிரில் இருந்த ஒரு வேப்ப மர அடியில் ஒரு குழி வெட்டி கரித் துண்டுகளால் நிரப்பிக் கொள்வார். அந்த குழிக்கு காற்றை அடிக்க ரப்பர் பம்ப் ஒன்றை இணைத்து அமைத்துக் கொள்வார். அந்த ரப்பர் பம்பில் இருந்து அமுக்க அமுக்க காற்று வேகத்தில் எரியூட்டப் பட்ட கரித்துண்டுகள் கணலாய் கொதிக்கும். அந்த நெருப்பின் தணலில் பாத்திர ஓட்டைகளை அடைப்பார்.

மற்றொரு விருந்தாளியாக வரும் வியாபாரி ஜவ்வு மிட்டாய் விற்பவர். ஒரு மரத்தில் ரோஸ் நிற மற்றும் வெள்ளை நிறத்தில் ஜவ்வு மிட்டாய் ஒட்டப்பட்டிருக்கும். அதில் இருந்து மூன்று பைசாவுக்கு கைகடிகாரமும் ஐந்து பைசாவுக்கு சைக்கிளும் செய்து கொடுப்பார். கைகடிகாரம் செய்து வாங்குபவர் கையில் அதை கட்டி விடுவார். அது சில நிமிடங்கள் தான் கையில் இருக்கும் .பின்னர் வாய்க்கு சென்றுவிடும். மிட்டாய் விற்ற பின் ஒரு ப்ளாஸ்டிக் காகிதம் கொண்டு தூசி படாதவாறு மிட்டாயை மூடி கிளம்பி விடுவார்.

பயாஸ்கோப்பில் படம் காண்பிப்பவர்களும் காலனிக்கு வருவார்கள். ஐந்து பைசா கொடுத்து சில நிமிடங்கள் ஒரு கண்ணை மூடிக் கொண்டு படம் பார்க்கலாம். படம் ஓட ஒட அவரும் வர்ணனை அளித்தவாறு இருப்பார். சில நேரங்களில் சாணை பிடிப்பவர்களும் காலனிக்கு வருவார்கள். தேய்ந்து போன கத்தி, கத்திரிக் கோல் மற்றும் அரிவாள் மனைகளை இவர் மீண்டும் பதமாக்கி கொடுப்பார். சாணை பிடிக்கும் பொழுது சிதறும் நெருப்புத் தூள்களை வேடிக்கை பார்த்தவாறே நாங்கள் நிற்போம்.

அக்கால காலனி

சில சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிவருவது அக்காலத்தில் சகஜம். அந்த சிறுவர்கள் காலனியில் சமயங்களில் வீடுவீடாக பிச்சை எடுத்து உண்பர். மொட்டை என்றழைக்கப்பட்ட சிறுவன் ஒருவன் எங்கள் காலகட்டத்தில் காலனிக்கு வருவான். அவன் வந்த நேரத்தில் வீட்டில் வளர்த்த கோழிகளுக்கு ஏதோ சீக்கு வந்து செத்து விழுந்தன.

சீக்கு என்றால் கோழிகள் நின்றவண்ணம் தூங்கி வழியும். ஒரு கோழிக்கு சீக்கு வந்துவிட்டால் அனைத்து கோழிகளுக்கும் பரவிவிடும். சீக்கு முத்தின கோழிகள் இறந்துவிடும். பொதுவாக சீக்கு பிடித்த கோழிகளை யாரும் உண்ண மாட்டார்கள்.

அதிலும் சீக்கு பிடித்து செத்த கோழிகளை குப்பைதொட்டியில் தூக்கி எறிந்துவிடுவர். அப்படி செத்த ஒரு கோழி குப்பைதொட்டியில் எறியப்பட்டு கிடந்தது. அதை பார்த்த மொட்டை நெருப்பு மூட்டி ஒரு சட்டியில் கோழியை சமைத்து உண்ண ஆரம்பித்தான். அவன் சாப்பிடும் கோழியை எச்சில் ஒழுக சிறுவர்களாகிய நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மூன்று முருங்கைகாய்களின் விலை இருபத்தைந்து பைசா

காலனியில் இருந்த வீடுகளில் எல்லாம் விதவிதமான பழமரங்கள் இருந்தன. எங்கள் வீட்டில் ஒரு மல்கோவா மாமரமும், ஒரு மாதுளை மரமும் இரண்டு முருங்கை மரங்களும் என்நினைவு தெரிந்து இருந்தன. 

எங்கள் வீட்டில் விளைவித்த இன்னொரு பணப்பயிர் முருங்கை காய். சீசன் போது நன்றாய் விளைந்த முருங்கைகாய்கள் இரண்டரை அடி நீளம் இருக்கும். அவற்றை சரியான பருவத்தில் பறிக்கத் தெரியவேண்டும். கொஞ்சம் விட்டாலும் அவை முத்திப் போய் ருசியற்று போய்விடும். கொஞ்சம் முன்னால் பறித்தாலோ அவை இளசாகி வீணாகி விடும். அதே  போல் முருங்கை காய்கள் பறிக்கும்பொழுது அவை முறிந்து விடாதவாறு பறிக்க வேண்டும்.

எங்கள் வீடு தபால் அலுவலகத்தை ஒட்டி இருந்தது. எழுபதுகளில் எல்லாம் குரியர் சேவை அறிமுகமாகவில்லை. அதனால் தபால் அலுவலகங்களின் பொற்காலம் அது. வங்கி ட்ராஃப்ட்டுக்கு பதில் போஸ்டல் ஆர்டர்கள் புழக்கத்தில் இருந்த காலம்.

மெயின்கார்ட் கேட் தபால் அலுவலகத்தில் தபால் காரர்கள், கணக்கர்கள் மற்றும் அலுவலர்களை சேர்த்து மொத்தம் நூறு பேருக்கு குறையாமல் வேலை பார்த்த காலம். நான் முருங்கை மரத்தின் மேல் ஏறுவதை பார்த்தவுடன் தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் தங்கள்பெயரை பதிவு செய்ய ஆரம்பித்துவிடுவர்.

மூன்று காய்களின் விலை இருபத்தைந்து பைசா. இது மார்க்கெட் விலையை விட மிகவும் மலிவானதாக இருந்ததால் எங்கள் வீட்டு முருங்கை காய்களுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. சில சமயம் சில முருங்கை காய்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசமாக எங்கள் தகப்பனார் எங்கள் மூலம் அனுப்பி வைப்பார்.நல்ல வசூல் என்றால் அம்மா எனக்கு பத்து பைசா செலவுக்கு கொடுப்பார். சில நேரங்களில் அம்மாவை ஏமாற்றி முருங்கைகாய் விற்ற பணத்தில் ஒரு ரூபாய் வரை மறைத்து வைத்து பின்னர் எடுத்து மிட்டாய்கள் வாங்கி தின்ன செலவு செய்திருக்கிறேன். 

கூர்க்காக்களின் ரோந்து பணி

திருச்சியில் குளிர்காலங்களில் நேப்பாளிகள் ஸ்வெட்டர் விற்க வருவார்கள். இந்த ஸ்வெட்டர்கள் வெயில் காலங்களில் அவர்களால் கையால் பின்னப்பட்டவை. அவர்களில் சில பெண்கள் தூளி கட்டி, முதுகில் தொங்கவிட்டு, அவற்றில் குழந்தைகளை கொண்டு வருவார்கள். அந்த பெண்களை கெட்ட எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களை இடுப்பில் எப்பொழுதும் மறைத்து வைத்திருக்கும் கத்தி கொண்டு கொலை செய்து விடுவார்கள் என்று பரவலாக பேசப்பட்டது.

இவர்கள் இல்லாமல் சில கூர்க்காக்களும் இரவில் திருச்சி வீதிகளில் ரோந்து வருவார்கள். அவர்கள் ரோந்து வரும் பொழுது பாரா உஷார் என்று சத்தம் போட்டவாறே ரோந்து வருவார்கள். இந்த கூர்க்காக்கள் கையில் ஒரு தடியும் இடுப்பில் ஒரு கத்தியும் வைத்திருப்பார்கள். இவர்கள் வீடுகளுக்கும் கடைகளுக்கும் நல்லதொரு பாதுகாவலாய் இருந்தார்கள். 

மாத முதல் வாரத்தில் ஒவ்வொரு வீடாகவும் கடைக்கும் சென்று இரண்டு இரண்டு ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் உலகமயமாக்குதலின் ஒரு நன்மையான உழைப்பவர்களின் இயக்கத்தால் செக்யூரிட்டி வேலைகளுக்கு இந்த கூர்க்காக்கள் வளைகுடா நாடுகளுக்கும் முன்னேறிய நாடுகளுக்கும் சென்று அமெரிக்க டாலரில் சம்பாதிக்கின்றனர். நேபாள தேசம் எழுபதுகளில் ஒரு ஏழை தேசமாக கருதப்பட்டது. இந்நாட்களில் வெளி நாடுகளில் இருந்து வரும் பணவரவுகளால் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும்  நாடுகளில் ஒன்றாக கருதப் படுகிறது.

நான் இரவு தூங்க சில நாட்களில் அதிக நேரம் எடுக்கும். அப்பொழுது அம்மா என்னிடம் ,” கூர்க்கா வரப்போறான். பாரா உஷார் சொல்லிய வண்ணம். சீக்கிரம் தூங்கு” என்று சொல்லி தான் பயமுறுத்துவார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *