
பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
அத்தியாவசிய பொருள்களை காசாவிற்குள் கொண்டு செல்லவும் இஸ்ரேல் தடை விதித்து இருக்கிறது. இதனால் குழந்தைகள் உணவு இல்லாமல் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர்.
காசாவில் நடந்து வரும் இத்தாக்குதல்களை கண்டித்து மும்பையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கோரி, `அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமை பவுண்டேசன்’ மும்பை போலீஸில் மனு கொடுத்திருந்தனர்.
இம்மனுவை மும்பை போலீஸார் தள்ளும்படி செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த மாதம் 10-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் இதற்காக ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.
கடந்த மாதம் 19-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மும்பை போலீஸாரிடமும் காசா தாக்குதலுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கோரி மனு கொடுத்திருந்தது.
கடந்த மாதம் 25-ம் தேதி இம்மனுவின் மீது தீர்ப்பு கூறிய நீதிபதிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு நீதிபதி குகே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, ”மனுதாரர் குறுகிய பார்வை கொண்டவராக இருப்பதற்குப் பதில் இந்தியாவில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சொந்த நாட்டைப் பாருங்கள். தேசபக்தராக இருங்கள். இது தேசபக்தி அல்ல. நமது சொந்த நாட்டில் உள்ள பிரச்னைகளுக்காக குரல் கொடுங்கள்” என்று வாய்மொழியாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் சிபிஐ (எம்)யின் விண்ணப்பத்தின் மீது தகுதியின் அடிப்படையில் மும்பை போலீஸார் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதி குகே தலைமையிலான அமர்வு குறிப்பிட்டது.

சிபிஐ(எம்)-இன் விண்ணப்பத்தை ஆய்வு செய்த போலீஸார் அம்மனுவை நிராகரித்தனர். அக்கட்சி உயர் நீதிமன்றத்தில் இதற்காக புதிய மனுவைத் தாக்கல் செய்தது.
இம்மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சிபிஐ(எம்) சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ”வரும் 20-ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மும்பை போலீஸார் அனுமதி வழங்கி இருக்கின்றனர். இப்போராட்டத்தின் போது போலீஸார் விதித்துள்ள விதிகளை முழுமையாக பின்பற்றுவோம்” என்று குறிப்பிட்டார்.
இதே போன்று அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ”சிபிஐ(எம்) அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசு அனுமதி கொடுக்கும். இதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.