• August 13, 2025
  • NewsEditor
  • 0

ஆர்.எஸ்.எஸ் டு தி.மு.க

அ.தி.மு.க முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தி.மு.க உறுப்பினர் அட்டையை முதல்வர் வழங்கினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், “தளபதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கட்சிக்காக என்னால் இயன்ற பணிகளையும், முயற்சிகளையும் செய்வேன். அ.தி.மு.க-வின் போக்கு சரியாக இல்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறார், இ.பி.எஸ்.

மைத்ரேயன்

அந்தக் கூட்டணியை அறிவித்ததே அமித்ஷாதான். மேலும் அவர் கூட்டணி ஆட்சி என்று சொல்லியிருக்கிறார். எந்த அடிப்படையிலும் அவர்களுடன் ஒருமித்த கருத்து வராது. அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. பல்வேறு நிர்வாகிகள் அங்கு மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். எனக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தார்கள். ஆனால் என்னைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனால்தான் அ.தி.மு.க-விலிருந்து விலகினேன். 2026 தேர்தலில் யாருக்கு 2-வது இடம் என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தமிழகம் நம்பர் ஒன் ஆக உள்ளது. 2026-ல் தி.முக. ஆட்சி அமைப்பது உறுதி” என்றார்.

அ.தி.மு.க-வை விட்டு விலகியது ஏன்?

இவ்வாறு, ‘அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பம் காரணமாக தான் தி.மு.க-வில் இணைத்தேன்’ என மைத்ரேயன் சொன்னாலும், அதற்குப் பின்னால் வேறு பல காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தொடர்ந்து பேசியவர்கள், “அடிப்படையில் மைத்ரேயன் ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டதும் 1991-ல் ஆர்.எஸ்.எஸில் இணைந்தார். அங்கிருந்து பா.ஜ.க-வுக்கு சென்றவர் 1995-1997 வரை தமிழ்நாடு பா.ஜ.க-வின் பொதுச் செயலாளராகவும், 1997-1999 வரை துணைத் தலைவராகவும், 1999-2000 வரை தமிழ்நாடு பா.ஜ.க தலைவராகவும் பணியாற்றினார். 1999-ல் பா.ஜ.க-வில் இருந்து விலகி, ஜெயலலிதாவின் தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

மோடி- மைத்ரேயன்

படிப்படியாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களின் பட்டியலில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு மாநிலங்களவை எம்.பி-யாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி 2002 முதல் 2019 வரை மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பணியாற்றினார். 2001-ல் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முடிவில் தோல்வியைத் தழுவினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் உட்கட்சி மோதல்கள் வெடித்தன. இதில் அ.தி.மு.க-வில் மைத்ரேயனின் செல்வாக்கு சரிந்தது. அந்த நேரத்தில்தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இரண்டு அணிகள் உருவாகின. அதில் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு கொடுத்தார், மைத்ரேயன். இதனால் 2022-ம் ஆண்டு அ.தி.மு.க-விலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

மயிலாப்பூர் கனவும் நிஜமும்!

இதில் அப்செட்டாக இருந்தவர் 2023-ல் மீண்டும் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்குத் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த மாநில தலைவர் பதவி கிடைக்கவில்லை. மேலும் முன்புபோல கட்சியில் அவருக்கு முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. இதில் அதிருப்தியாக இருந்தவர் 2024ல் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். இந்தமுறை அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் கட்சியினர் யாரும் அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. வரும் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட சீட் எதிர்பார்த்தார். ஆனால், ‘பல கட்சியில் பயணித்தவருக்கு சீட் வழங்க வேண்டுமா?’ என, அ.தி.மு.க-வில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மைத்ரேயன்- பன்னீர்செல்வம்

இதையடுத்து வேளச்சேரி தொகுதிக்கு காய் நகர்த்தினார். அதற்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிட விரும்புகிறது. இதனால் தனக்கு கட்சியில் மரியாதையும் இல்லை, சீட்டும் கிடைக்காது என்பதை மைத்ரேயன் தரப்பு உணர்ந்தது. எனவேதான் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். தி.மு.க-வில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என மைத்ரேயன் எதிர்பார்க்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பு மிக, மிகக் குறைவு. அதேநேரத்தில் சமீபத்தில் அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க-வில் இணைந்தார். அவருக்கு இலக்கிய அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் மற்றொரு முன்னாள் எம்.பி-யான மைத்ரேயன் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொடர்ந்து அ.தி.மு.க-வில் விக்கெட்டுகள் விழுவது எடப்பாடி தரப்பைக் கலங்கச் செய்திருக்கிறது.” என்றனர் விரிவாக.

தேர்தல் நேரத்தில் கட்சி வேஷ்டியை மாற்றுவது ஒன்றும் அரசியல்வாதிகளுக்கு புதிதல்ல!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *