
2025 ஜூலை மாதத்தின் பிளேயர் ஆஃப் தி மன்த் (Player of The Month) விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சும்பன் கில்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்தியதுடன் பேட்ஸ்மேனாகவும் சிறப்பான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறார் கில். இவரது சிறப்பான ஆட்டம், இளம் இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய உதவியது.
கில் மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் வியான் முல்டர் ஆகியோரும் ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி -யின் `பிளேயர் ஆப் தி மன்த்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விருதுக்கு பலத்த போட்டி நிலவியபோது கில் அவரது சாதனைகளால் விருதை தட்டிப்பறித்திருக்கிறார் என ஐசிசியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன் முதலாக கேப்டனாகக் களமிறங்கிய கில், 754 ரன்களைச் சேர்த்துள்ளார்.
டெஸ்ட் வரலாற்றில் 1936-1937 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டனாக டான் பிராட்மேன் எடுத்த 810 ரன்களுக்குப் பிறகு, ஒரு கேப்டனின் அதிகபட்ச ரன் குவிப்பு இதுவே. இதைத் தவற மேலும் பல சாதனைகளைச் செய்துள்ளார் கில்.
முதல் மூன்று போட்டிகளில் விளையாடி 6 இன்னிங்ஸில் ஒருமுறை இரட்டை சதம், இரண்டு முறை சதம் விளாசி அசத்தினார். இதற்கு முன்பு கில் SENA நாடுகளில் ஒரு சதம் கூட அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் நான்கு முறை ஐசிசி `பிளேயர் ஆப் தி மன்த்’ விருதுபெறும் ஒரே இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார் கில்.
இது குறித்து, “ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி” எனப் பேசியிருக்கிறார் கில்.
“ஒருகேப்டனாக முதல்முறை களமிறங்கிய தொடரில் வெளிப்படுத்திய திறனுக்காக இது கிடைக்கும்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பர்மிங்கமில் அடித்த இருநூறுக்காக நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சமாக அது இருக்கும்.
ஒரு கேப்டனாக இந்தத் தொடர் எனக்கு சிறந்த படிப்பினை, இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக விளையாடினர், எல்லா வீரர்களும் இதை நீண்டநாட்களுக்கு நினைவில் வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
என்னை இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வரும் சீசனில் என் ஃபார்மைத் தொடரவும் நாட்டுக்கு பல விருதுகள் பெற்றுக்கொடுக்கவும் ஆவலாக இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.