
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு சத்யராஜ் நடித்த 100 வது படங்கள் கமர்ஷியலாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.
சிவகுமார் நடித்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படங்கள் பெரிதாக பேசப்பட்டன. அதே சமயம் வணிக ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
‘கேப்டன் பிரபாகரன்’ வெளியாகி 35 வருடங்கள் ஆகிறது. வருகிற 22-ம் தேதி மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் ரீ ரிலீசாகிறது.
ஃபெப்சி சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான செல்வமணி, விஜயகாந்த் படத்தின் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நம்மிடையே பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி,” கேப்டன் பிரபாகரன் படத்தின் உயிர்நாடி காடுதான். நாங்கள் ஷுட்டிங் நடத்திய பகுதிகள் லேசாக கிடைக்கவில்லை.
நல்ல லோகேஷன் தேடி நான் காரிலேயே இந்தியா முழுக்க அலைந்து திரிந்தேன்.
கிட்டத்தட்ட 40,000 கி.மீ தூரம் பயணப்பட்டேன். கடைசியில் நான் எதிர்பார்த்த இடம் கேரளாவில் உள்ள சாலக்குடியில் கிடைத்தது.
அங்கே கொட்டும் மழையில் ஷுட்டிங் நடந்தது. அடிக்கடி விபத்து நடந்தது. ஒருமுறை இரண்டு டிரைவர்கள், ஒரு குதிரையை காவு வாங்கியது சாலக்குடி.

செண்டிமெண்ட்டாக அப்செட் ஆன இப்ராகிம் ராவுத்தர் படப்பிடிப்பை தமிழ் நாட்டுக்குள் நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டந்துறை வனப்பகுதியில் படப்பிடிப்பை மாற்றினோம்.
அங்கே பேய் மழை பெய்து மிரட்டியது. அந்த லோகேஷன் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை . சாலக்குடி காட்டில் 500 மீட்டர் இடைவெளியில் நில அமைப்பு வித்தியாசமாக இருக்கும் அதனால் மீண்டும் அங்கேயே ஷுட்டிங் நடத்த முடிவு செய்தேன்.
அங்குள்ள சுரபி தியேட்டரிலுள்ள பேபி என்பவர் மூலமாக சாலக்குடியில் ஷுட்டிங் நடத்தை காட்டிலாகா அதிகாரிகளிடம் பர்மிஷன் வாங்கினேன்.
இந்த விஷயத்தில் ராவுத்தருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை.
கேப்டன் ரோய் இல்லாமல் மலை பாறைகளில் டூப் போடாமல் ஒரிஜினலாக சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடித்தார்.
வீரப்பன் கதாபாத்திரத்தில் கரிகாலன் நடிப்பதாக முடிவு செய்து வைத்து இருந்தேன்.
அவரை வைத்து இரண்டு நாட்கள் படம் பிடித்தேன். அப்போது சென்னையில் சைக்கிளில் வைத்து பேண்ட், சார்ட் துணிகளை வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.
அவரை சாத்தியம் கேரக்டரில் நடிக்க வைப்பதற்காக சாலக்குடிக்கு வரவழைத்து இருந்தேன். கரிகாலனுக்கு ஏனோ வீரபத்திரன் பாத்திரத்தில் நடிக்க ஈடுபாடு இல்லை.

ஏனோ தானோ என விரும்பம் இல்லாமல் நடிப்பதை புரிந்து கொண்டேன். அப்போது நான் எடுத்த திடீர் முடிவு வீரபத்திரன் வேஷத்தில் மன்சூர் அலிகானை நடிக்க வைத்தேன்.
என் கணிப்பு வீணாகவில்லை ‘கேப்டன் பிரபாகரன்’ ரிலீஸ் ஆன பிறகு ஹீரோவுக்கு இணையாக மன்சூர் நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.
இப்போது நவீன தொழில் நுட்பத்தில் பார்க்கும் போதும் ரம்யா கிருஷ்ணன் ஆடிய, ‘ஆட்டமா’ பாடல் காட்சி பிரமிப்பாக இருக்கிறது. முதலில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரத்திற்கு சரண்யாவை செலக்ட் செய்து வைத்து இருந்தேன்.
அவரும் மூன்று நாள்கள் சாலக்குடி காட்டில் நடித்து கொடுத்தார் அங்கே அட்டைப் பூச்சிகள் சரண்யாவை மொய்த்துக் கொள்ள, அவ்வளவுதான் அலறி விட்டார்.
சென்னைக்கு வந்தவர் திரும்ப நடிக்க வரவே இல்லை. அப்போதுதான் ரம்யா கிருஷ்ணன் எண்ட்ரி ஆகி சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.
செண்டிமெண்ட்டாக ரம்யாவுக்கு குழந்தை பிறப்பது போல் காட்சி அமைத்து இருந்தேன். அந்த நேரம் பார்த்து கேப்டன் மகன் விஜய் பிரபாகரன் பிறந்தார்.
அப்போது கேப்டன் சென்னை மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டு இருந்தார். மகன் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியோடு மனைவியையும் மகனையும் பார்த்தார்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த மொத்த ஆர்டிஸ்ட்ட்டுகள் மற்றும் இளையராஜா முதல் அனைத்து டெக்னீஷியன்கள் அனைவருக்கும் மொத்தச் செலவு 15 லட்சம் மட்டுமே.
ஆனால் படத்தின் பட்ஜெட் செலவு மட்டும் ஒரு கோடியே 35 லட்சம் செலவானது. அப்போது கேப்டன் நடிக்கும் படத்தின் மொத்த பிசினஸ் ஒண்ணே கால் கோடி மட்டும் தான்.
அந்த சூழ்நிலையில் ஒண்ணரை கோடி பட்ஜெட்டில் கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்து முடித்தேன். கோவை, மதுரை, பெங்களூர் இடங்களில் மட்டும் தாமே சொந்தமாக படத்தை ரிலீஸ் செய்தார், ராவுத்தர்.
மூன்று ஏரியாக்களில் மட்டுமே ஒண்ணரை கோடி லாபம் சம்பாதித்தனர். தமிழ்நாட்டின் எல்லா ஏரியாக்களிலும் சிரபுஞ்சி மாதிரி பணமழை கொட்டியது என்பதை காலமும் மறக்காது, கலையுலகமும் மறக்காது ” என்று சொல்லி முடித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…