
அதிமுக முன்னாள் எம்பி-யான மைத்ரேயன் இன்று (ஆகஸ்ட்13) அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைத்திருக்கிறார்.
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மைத்ரேயன், “தளபதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கட்சிக்காக என்னால் இயன்ற பணிகளையும், முயற்சிகளையும் செய்வேன். அதிமுக-வின் போக்கு சரியாக இல்லை. பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
அந்தக் கூட்டணியை அறிவித்ததே அமித்ஷாதான். அதுமட்டுமின்றி அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லியிருக்கிறார். எந்த அடிப்படையிலும் அவர்களுடன் ஒருமித்த கருத்து வராது. அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. பல்வேறு நிர்வாகிகள் அங்கு மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள்.
எனக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தார்கள். ஆனால் என்னைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனால்தான் அதிமுகவிலிருந்து விலகினேன். 2026 தேர்தலில் யாருக்கு 2-வது இடம் என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம் நம்பர் ஒன் ஆக உள்ளது. 2026-ல் திமுக ஆட்சி அமைப்பது உறுதி” என்று கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக-வில் ஏற்பட்ட தலைமை மோதலால் மைத்ரேயன் பாஜக-வில் இணைந்தார். பாஜக-வில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இணைந்தார். ஆனால், அவருக்கு அங்கு எதிர்பார்த்த அளவு பொறுப்புகளோ, பதவியோ கிடைக்கவில்லை.

இதனால், பாஜக மீது அதிருப்தி அடைந்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். இந்தச் சூழலில், அதிமுக-வில் இருந்து விலகி இன்று மைத்ரேயன் திமுகவில் இணைகிறார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக-வின் முன்னாள் எம்பியான அன்வர் ராஜா அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். தற்போது மற்றொரு முன்னாள் எம்பி-யும் திமுக-வில் இணைய இருப்பது அதிமுக-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.